பக்கம் எண் :

466கல்லாடம்[செய்யுள்62]



நிலையினின்றும்; கடவா மனத்தவர்போல - பிறழாத நெஞ்சுள்ள மெய்யன்பர் போன்று என்க.

     (வி-ம்.) மாறு - மாறுபாடு. மதி-அறிவு. மன்-நிலைபெற்ற. நிலை-அருள்நிலை.

31 - 32: ஒன்னலர்................................... தேரே

     (இ-ள்) ஒன்னலர் இடுதிறை-பகைவரால் அளக்கப் படுகின்ற திறைப்பொருளின் பொருட்டு; செலினும்-அரசனாகிய அவள் கணவன் சென்றாலும்; அவன் பரித்தேர்-அவனுடைய குதிரைகளையுடைய தேரானது; தன்நிலை கடவாது - அன்றே மீண்டுவந்து தனது கொட்டிலில் தங்குவதன்றி அதனைக் கடந்து வேற்றிடங்களில் தங்குவதன்று என்க.

     (வி-ம்.) ஒன்னலர் - பகைவர். அவள் தேர் தன்நிலை கடவாது என்றது அவன்மேற்கொண்டு செல்லும் வினை இடையூறின்றி முடிதலின் அன்றே மீண்டுவந்து தன் நிலையில் தங்கும் என அவள் கணவனுடைய ஆள்வினைத் திறத்தை விதந்துரைத்த படியாம். இதனை, கருவுயிர்த்தெடுத்த அன்னை, அனவ்வள் கற்பு நின்னையும் கடந்தது, அவள் பொறை நிலமகட் கடந்தது, வாய்மையின் மதன் ஊழையுங் கடந்தது, அன்னவளில்லம் நின்னிலங் கடந்தது, மற்றவளூரன் கொற்ற வெண்குடை நின்னூரனைக் கடந்தது, மதிக் கிளையினர் நின்கிளையினர் தம்மையும் கடந்தனர், பொன்னவட் கினியோள் என்னையுங் கடந்தனள், புதுமதிச் சடையோன் மன்னிலை கடவா மனத்தவர்போல ஒன்னல ரிடுந்திறைச் செலினும் அவன் பரித்தேர் தன்னிலை கடவாதென வினைமுடிவு செய்க. மெய்ப்படும் பயனும் அவை.