|
காரைக்காலம்மையார்.
அவ்வம்மையாரே பலவிடங்களில் தம்மைப் பேய் என்று கூறலால் இவரும் அங்ஙனமே கூறினார்.
வடம்-ஆல். வனம்-காடு. எனவே திருவாலங்காடு என்றாயிற்று. அருமறை-உணர்தற்கரிய வேதம்.
குனித்தல்- கூத்தாடுதல். அம்பலத்தினும் திருவாலங்காட்டினும் அடியாருளத்தினும் குளித்தருள்
நாயகன் என்க. தவர்-பதஞ்சலி முதலிய தவத்தோர்.
20-23:
வெள்ளி........................நிற்க
(இ-ள்)
வெள்ளி அம்பலத்துள் துள்ளிய ஞான்று-வெள்ளியாலியன்ற மன்றத்தின்கண் நடித்தருளிய
நாளிலே; நெருப்பொடு சுழலவும்- இப்பனிப்பருவத்துக் குளிருக்கஞ்சிக் கையிலே நெருப்பினை
ஏந்திச் சுழன்று ஆடாநிற்பவும்; விருப்பு எடுத்து-அத்தீயின்கண் விருப்பங்கொண்டு; அ
அழல் கையினில் கொள்ளவும்-அந்த நெருப்பினை எப்பொழுதும் கையில் ஏந்தாநிற்பவும்;
கரி உரி மூடவும்-பின்னரும் யானைத் தோலைப் போர்த்துக் கொள்ளவும்; ஆக்கிய-இவ்வாறு
பாகுபடுத்திய; பனிப்பகை கூற்று இவை நிற்க-பனியாகிய இந்நோயின் இக்கூறுபாடுகள் நிற்க
என்க.
(வி-ம்.)
துள்ளுதல்-நடித்தல். இறைவன்-இக்குளிருக்கஞ்சியே ஆடும் பொழுதும் அனலேந்தி ஆடுகின்றான்.
எஞ்சிய பொழுதும் அதனை ஏந்தியிருக்கின்றான். பின்னரும் யானைத்தோலையும் போர்த்துக்கொள்கிறான்
என்றவாறு.
24-26:
ஆங்கு......................வேண்டினள்
(இ-ள்)
அவர் ஆங்கு துயர்பெற-கடவுளராகிய அவரெல்லாம் இவ்வாறு இப்பனியால் துன்புறா நிற்ப;
என் ஈன்ற ஒருத்தி-என்னை ஈன்ற என் தாயானவள்; புகல் விழும் அதற்கு அன்பு இன்றி-தான்
புகலாக விரும்பத்தக்க அம்மகவின்பால் அன்பின்றி; மகவினைப்பெறல் ஆம் வரம் வேண்டினள்-
பிள்ளையைப் பெறுதற்கரிய வரம் கிடந்து என்னை ஈன்றாள். யான் அவளை நோவதன்றி யாரை
நோவேன் என்க.
(வி-ம்.)
என் தாய் தன்மகவு இப்பனிப்பருவத்தில் இங்ஙனம் துன்புறும் என்றறிந்திருந்தும் அம்மகவின்பால்
அன்பின்றி வீணே வரங்கிடந்து என்னை ஈன்றாள். என் துன்பத்திற்கு என் தாயே காரணமன்றிப்
பிறர் இலர் என்று தாயை நொந்துரைத்தவாறு.
இதனை,
காயவும் அணைக்கவும் உறுக்கவும் கூடவும் ஓம்பவும் சுழலவும் கொள்ளவும் மூடவும் ஆக்கிய
பனிப்பகைக் கூற்று நிற்க, அவர் துயர்பெற ஈன்ற வொருத்தி அன்பின்றி மகவுபெறலாம்
வரம் வேண்டினளென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.
|