|
மலரிலே பிறந்து; பார்முதல்
படைத்தவன்-நிலமுதலிய உலகங்களைப் படைத்த பிரமனுடைய; நடுத்தலை அறுத்து-ஐந்து தலைகளுள்வைத்து
நடுவிருந்த தலையினைக் கிள்ளி; உலகு புனிதக்கலன் எனத் தொழக் கொண்டு-சான்றோர்
தூய கலம் என்று தொழும்படி கைக்கொண்டருளி; வட்டம் முக்கோணம் சதுரம்-வட்டவடிவமாகவும்
முக்கோணவடிவமாகவும் சதுரவடிவமாகவும்; கார்முகம் நவத்தலை தாமரை வளைவாய் பருந்து என-வில்வடிவாகவும்
ஒன்பது கோணவடிவாகவும்; கண்டன மகந்தொறும்-செய்யப்பட்டனவாகிய குறிகளையுடைய வேள்விகள்
தோறும்; கலிபெறச் சென்று; வேதமுழக்கமுண்டாகப் போய்; நறவு இரந்து அருளிய-அவியுணவைக்
கேட்டருளிய; பெரியவர் பெருமான்-நீத்தோர் பெருமானும் என்க.
(வி-ம்.)
உவணம்-கருடன். உந்தி-கொப்பூழ். பார்-நிலவுலகம். புனிதம்-தூய்மை. உலகு: ஆகுபெயர்.
வட்டம் முதலிய வடிவாக இயற்றப்பட்ட வேள்விக்குழி என்க. கார்முகம்-வில். நவத்தலை-ஒன்பதுகோணம்.
தாமரை: ஆகுபெயர். வளைவாய்: வினைத்தொகை. மகம்-வேள்வி. நறவு-அவியுணவு பிரமனுடைய
தலையை அறுத்துக் கலனாகக்கொண்டு நறவு இரந்தருளிய பெருமான் நீத்தோர் பெருமான் எனத்
தனித்தனி கூட்டுக. பெரியவர்-நீத்தோர்.
14-17:
கூக்குரல்.........................ஒப்புடையாய்
(இ-ள்)
கூக்குரல் கொள்ள-கூவுகின்ற குரலொலியானது உலகமெல்லாம் பரவும்படி; கொலைதரு நவ்வியும்-கொலைசெய்யவந்த
மானையும்; விதிர் ஒளி காற்ற கனல்-யாவரும் நடுங்கும்படி ஒளிவீசுதலால் அழற்கடவுளும்;
குளிர்-குளிர்தற்குக் காரணமான; மழுவும்-மழுவையும்; இருகரம் தரித்த-வலக்கையிலும் இடக்கையிலும்
ஏந்திய; ஒருவிழி நுதலோன்-ஒரு கண்பொருந்திய நெற்றியையுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ள;
கூடல் ஒப்பு உடையாய்-மதுரைமாநகரத்தை ஒத்த தோழியே கேள்! என்க.
(வி-ம்.)
கூக்குரல்-கூவுகின்ற குரல். கொள்ளுதல்-பரவுதல். நவ்வி-மான். காற்றுதல்-வீசுதல். ஒளி
வீசுதலால் தீக்கடவுளும் குளிர்தற்குக் காரணமான மழு என்க. இருகரந் தரித்த ஒருவிழி
நுதலோன் என்புழிச் செய்யுளின்ப முணர்க.
17-22:
குலம்........................பாசறையினுமே
(இ-ள்)
குலம் உடு தடவும்-கூட்டமான விண்மீனைத் தீண்டாநின்ற; மதில்தலை வயிற்றுள்-மதிலின்
உச்சியிலும் அதன் அகத்தினும்; படும் அவர் உயிர்க்கணம்-துன்பப்பட்டிருந்த அப்பகைவருடைய
உயிர்கள்; தனித்தனி ஒளித்து தணக்கலும் அரிது என-யாம் தனித்தனியே மறைந்து ஓடிப்
|