பக்கம் எண் :

552கல்லாடம்[செய்யுள்77]



போதலும் அரிதென்று கருதும்படி; போக்கு அற வளைந்து-அவர் தப்பிப்போகாதபடி மதிலைச் சூழ்ந்து; புணர் இருள் நாளும்- முற்றுகையிட்டிருந்த இருளையுடைய இரவிலும் பகலிலும்; காவல் காட்டின வழியும்-காவல் காத்தவிடத்தும்; தேவர் காட்டும் பாசறையினும்-தேவரைக் காட்டுகின்ற பாசறையிடத்தும் என்க.

     (வி-ம்.) உடு-விண்மீன். தலைமதில்-தலையாய மதில் எனினுமாம். அவர்-நொச்சிமறவர். போக்கு-தப்பிப்போதல். புணர்தல்-முற்றுகையிட்டு இருத்தல். இருளும் நாளும் என உம்மை விரித்தோதுக. இருள்-இரவு. நாள்-பகல். பாசறையிலுள்ளோர் போர்க்களம் புக்குழிப் பகைவர்க்கஞ்சாது விழுப்புண்பட்டிருந்த பொழுது தேவர் ஆவராதலால் தேவர்காட்டும் பாசறை என்றார்.

1-6: மருவளர்...................தழீஇயினள்

     (இ-ள்) மருவளர் குவளை மலர்ந்து-கண்களாகிய மணமிக்க குவளைமலர்ந்து; முத்து அரும்பி-பற்களாகிய முத்துக்கள் தோன்றி; பசுந்தாள் தோன்றி மலர் நனி மறித்து-கைகளாகிய பசிய தண்டினையுடைய காந்தள்மலர் பெரிதும் வளைந்து; நெட்டு எரி ஊதை நெருப்பொடு கிடந்து-வேகமாய் வீசாநின்ற பனிக்காற்றாகிய நெருப்போடு கிடந்து; மணிபுறம் கான்ற புரிவளை விம்மி-மணிகளைப் புறத்திலே உமிழ்ந்த கழுத்தாகிய வரை பொருந்திய சங்கு விம்மி; விதிப்பவன் விதியா-பிரமன் விதித்தற்கிசையாத; ஓவம் நின்றென- ஓவியம் நிலைபெற்றிருந்தாற்போல; என் உள்ளமும் கண்ணும்-என் நெஞ்சத்தையும் கண்ணையும்; நிலையுறத் தழீயிஇனள்-விட்டு நீக்காமல் தழுவியிருந்தனள், ஆதலால் எம்முள் பிரிவு என்பது ஒன்றில்லைகாண் என்க.

     (வி-ம்.) இவள் இரவும் பகலும் யாம் காத்த விடத்தும் பாசறையிடத்தும் குவளைமலர் போன்ற கண்கள் மலர்ந்தவளாய் முத்துப் போன்ற பற்கள் தோன்றப்பெற்றுக் காந்தட்பூப்போன்ற கைகளினால் முகத்தைத் தாங்கி உதைபோன்ற நெட்டுயிர்ப்பாகிய நெருப்போடே சங்கம் போன்ற கழுத்து விம்ம அழுது ஓவியம்போல என்நெஞ்சினும் கண்ணினும் இடையறாது இருந்தாள். ஆதலால் இவளை யான் பிரிந்தறியேன் என்பது கருத்து. எனவே தான் பிரிந்துழித் தலைவி ஆற்றாமையால் வருந்தியிருக்கும் நிலைமையை யான் இடையறாது என் மனக்கண்முன்னே கண்டிருந்தேன். ஆதலாற்றான் விரைந்து மீள்வேனாயினேன் எனத் தலைவியைத் தான் மறவாமையை உணர்த்தினாளாயிற்று.

     இதனை, அறுத்துக்கொண்டு சென்று தரித்த நுதலோன் கூடலொப்புடையாய், புணரிருணாளும் வழியும் பாசறையினும் மலர்ந்து அரும்பி மறித்துக்கிடந்து விம்மி ஓவநின்றென வுள்ளமுங் கண்ணுந் தழீஇயினளென வினைமுடிவுசெய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.