|
தோன்றிய; பெருங்கார்
கருங்காடு அரும்பிய மிடற்றோன்-மிகுந்த கரிய நிறத்தையுடைய நஞ்சு காணப்படும் மிடற்றினை
யுடையவனது என்க.
(வி-ம்.)
பரிதி-சக்கரப்படை. கடு-நஞ்சு. சகரர் வேள்விக்குதிரையைக் கண்டு பிடித்துக் கட்டும்
பொருட்டுத் தோண்டிய வேலை என்க.
26-30:
எறிந்து......................கொடியே
(இ-ள்)
எறிந்து வீழ் அருவியும்-ஒலித்தெழுகுகின்ற அருவி நீரும்; எரிமணி யீட்டமும்-சுடர் விடுகின்ற
மணிக்கூட்டமும்; உள்ளுதோறு உள்ளுதோறும் உணா அமுது உறைக்கும்-நினைக்கும்தோறும் நினைக்கும்
தோறும் உண்ணத்தகுந்த அமிழ்தம் சுவராநின்ற; திரு முத்தமிழ்- அழகிய இயல் இசை நாடகமென்னும்
மூன்று தமிழும்; பெருகு தென்மலயத்து ஆர்ப்பொதும்பர்-பெருகுதற்கிடமாகிய தெற்கின்கணுள்ள
பொதிகை மலையிலுள்ள சந்தனச் சோலைகள்; அடைகுளிர் சாரல்-நெருங்கிய குளிர்ந்த சாரலின்கண்;
சுரும்புடன் துணர் மலர் விரிந்த கொடியே-வண்டுகளுடனே பூங்கொத்துக்கள் மலர்ந்த கொடியே!
என்க.
(வி-ம்.)
எறிதல்-ஒலித்தல். எரிதல்-சுடர் வீசுதல். உள்ளுதல்-நினைத்தல். உறைத்தல்-துளித்தல்.
மலயம்-பொதியமலை. ஆரம்-சந்தன மரம். துணர்- பூங்கொத்து.
31-33:
விண்.........................குலமே
(இ-ள்)
விண் பிரித்து ஒடுக்கும் இரவி வண் கவிகைக்கு-விண்ணிலே ஒளியைப் பரப்பிச் சுருக்கா
நின்ற ஞாயிறாகிய நல்ல குடைக்கு; இட்டு உறை காம்பு என-அமைந்திருக்கும் காம்பு போல;
விட்டு எழுகாம்பே-மேலோங்கி எழுந்த மூங்கிலே!; மரகதம் சினைத்த சிறை மயில் குலமே-மரகதமணி
கிளைத்தெழுந்தாற் போன்ற சிறகினையுடைய மயிலினங்களே என்க.
(வி-ம்.)
ஞாயிற்றுக்குக் குடை உவமை. மூங்கில் அக்குடைக் காம்பிற் குவமை. சினைத்தல்-கிளைத்தல்.
சிறை-சிறகு.
34-39:
நீல.........................சுரும்பே
(இ-ள்)
நீலப்போதும் பேதையும் விழித்த பொறி உடல் உழையே-கருங்குவளை மலரும் மகளிர் கண்ணும்
போன்று விழிக்கின்ற புள்ளிகளமைந்த உடலையுடைய மானினமே!; எறிபுன மணியே-தினை அரிந்து
விடப்பட்ட புனத்திலுள்ள மணிகளே!; பாசிழை பட்டுநூல் கழிபரப்பிய கிளைவாய் கிடைத்த
|