|
வளைவாய்க் கிளியே-பச்சை
நிறமுடைய பட்டு நூலைக் கழியின்கண் பரப்பி வைத்தாற் போன்று மூங்கிலின்கண் இருக்கின்ற
வளைந்த வாயையுடைய கிளிகளே!; மைந்தர்கண் சென்று மாதருள் தடைந்த-ஆடவருடைய கண்கள்
சென்று மகளிரிடத்தே தடைப்பட்டாற்போல; மதுமொழி புதுமலர் போக்கு உடை கரும்பே-தேன்
சொரிகின்ற நாள்மலரிடத்துச் சென்று மொய்த்தலையுடைய வண்டுகளே! என்க.
(வி-ம்.)
கழி என்றது ஒரு நெயவுக் கருவியை. கிளை-மூங்கில். கிடைத்தல்-இருத்தல். வளைவாய்;
வினைத்தொகை, மூங்கிலிலிருக்கும் கிளிகளுக்குக் கழியிற் பரப்பிய பச்சைப் பட்டு
நூல் உவமை. மலரிடத்துத் தாதூதும் வண்டுக்கு மாதர் அழகிடத்தே சென்று தடையுண்ட ஆடவர்
கண்கள் உவமை. புதுமலர்-அன்றலர்ந்த மலர்.
40-44: வெறி.........................இதணே
(இ-ள்)
வெறி முதிர் செம்மல் முறிமுகம் கொடுக்கும்-மணமுதிர்ந்த பழம்பூவைத் தளிர் முகத்தினாலே
சொரியா நின்ற; சந்தனப் பொதும்பர் தழைசினை பொழிலே-சந்தன மரங்களிலே தழைத்துள்ள
கிளைகளையுடைய சோலையே; கொள்ளை அம் சுகமும் குருவியும் கடிய-தினைக்கதிரைக் கொள்ளை
கொள்ளும் அழகிய கிளிகளையும் குருவிகளையும் ஓச்சுதற்கு; இருகால் கவணிற்கு எரி மணி
சுமந்த-இரண்டு கால்களையுடைய கவண் என்னும் கருவியில் வைத்து வீசுதற்கு வேண்டிய சுடர்மணிகளைச்
சுமந்துள்ள; நெடுங்கால் குறுஉழி நிழல் வைப்பு இதணே-நீண்ட கால்களையும் குறுகிய இடத்தையுமுடைய
நிழல்தரும் பரணே! என்க.
(வி-ம்.)
வெறி-மணம். செம்மல்-பழம்பூ. கடிதல்-ஓச்சுதல். கால்-கவண் சுற்றும் கயிறு. எறிமணி:
வினைத்தொகை; உழி-இடம். இதன்-பரண்.
45-49:
நெருநல்................................கிடக்க
(இ-ள்)
நெருநல் கண்ட எற்கு-நேற்றுக் கண்ட எனக்கு; உதவிய இன்பம்-தந்த இன்பத்தை; இற்றையில்
கரந்த இருள் மனம் என்னே-இற்றைநாள் தாராமலொளித்த இருண்ட அவளுடைய நெஞ்சம் இருந்தவாறு
என்னோ அதுதானும்; இவண் நிற்க வைத்த ஏலாக்கடுங்கண்-இவ்விடத்தே இவ்வாறு யான் மயங்கி
நிற்கும்படி செய்த தகாத இக் கொடுமை எவ்வாறிருக்கின்ற தென்னின்; கொடுத்து உண்டவர்
பின் கரந்தமை கடுக்கும்-நாளும் வறியோர்க்கு வழங்கியுண்ணும் சான்றோர் பின்னொருநாள்
வழங்காது ஒளித்த தன்மையை ஒக்கும்; ஈங்கு இவை கிடக்க-இவ்விடத்தே இவை இங்ஙனமிருப்ப
என்க.
|