பக்கம் எண் :

644கல்லாடம்[செய்யுள்92]



1 - 6: வெறிமறி......................................செறிந்து

     (இ-ள்) வெறிமறி ஆட்டின் குரல்மடை தோல் காய்த்து என்ன-வெறியாடுதற்குரிய ஆட்டினது குரல்வளையினிடத்துத் தோலாகிய அதர் தோன்றியிருப்பதுபோல; இருக்கினும் இறக்கினும் உதவா-இயிரோடிருந்தாலும் இறந்தாலும் உயிர்க்குறுதி செய்யமாட்டாத; தேவர்தம் பொய்வழிக் கதியகம் ஏனைத் தேவர்களுடைய பொய்ந்நெறியாகிய கதியினிடத்தே; மெய்யெனப் புகாத விழியுடைத் தொண்டர்-அவற்றை மெய்யென்று கருதிச்செல்லாத ஞானக்கண்ணையுடைய மெய்யடியார்கள்; குழீஇ தளிர்த்துமுடி தேய்ப்ப சிவந்த-கூடி அகமகிழ்ந்து வணங்குங்கால் அவர்தம் முடியினால் தேய்ப்புண்டு சிவந்த; தண்டை அம் துணைத்தாள்-தண்டையணிந்த அழகிய திருவடிகளையுடைய; சேயோன் பரங்குன்று-முருகப்பெருமானுடைய திருப்பரங்குன்றத்தினை; இழை எனச் செறித்து-அணிகலனாக அணிந்து கொண்டு என்க.

     (வி-ம்.) வெறி-வெறியாடல். மறி-ஆடு. குரல் மடைத்டோல் என மாறுக. குரல்மடை-குரல்வளை; கழுத்து. தோல்-தோலுறுப்பு. இதனை அதர் என்று கூறுவர். இவ்வதர் ஆட்டிற்கு யாதொரு பயனும் விளைத்தலின்று. ஆதலால் பயன்படாத பொய்ந் நெறிகட்கு உவமையாக எடுத்தோதினார். இருக்கினும் இறக்கினும் என்றது இம்மைக்கும் மறுமைக்கும் என்றவாறு. விழி-அறிவுக்கண். தண்டை-ஒருவகை காலணி. துணைத்தாள்-இரண்டாகிய அடிகள். குழித் துளிர்த்து முடி தேய்ப்ப என மாறுக. தளிர்தல்-மகிழ்தல். சேயோன்-முருகன். இழை-அணிகலன்.

7 - 11: தமிழ்க்..................................உண்ணாரென

     (இ-ள்) தமிழ்க்கலை மாலை சூடி-முத்தமிழாகிய மணி மாலையை அணிந்து; தாவாப் புகழ்க்கலை உடுத்து-கெடாத புகழாகிய ஆடையை உடுத்துக்கொண்டு; புண்ணியக்கணவன்-அறக்கடவுளாகிய தன் கணவன்; பல் நெறி வளம் நிறப் பூட்சியில் புல்லும்-பலவகைப்பட்ட வளப்பங்களையும் உடைய மார்பினாலும் மெய்யாலும் தழுவ நின்ற; தொல்நிலை கூடல்-பழம்பதியாகிய மதுரையில்; துடி இடை அகத்தனை-உடுக்கைபோன்ற இடையையுடைய உமையையுடைய பாகத்தையுடைய சிவபெருமானை; அன்பு உளத்து அடக்கி இன்பம் உண்ணார் என-அன்பினால் நெஞ்சத்திலிருத்திப் பேரின்பத்தை நுகரமாட்டாட அறிவிலிகள் போல என்க.

     (வி-ம்.) தமிழ்க்கலை-இயல், இசை, நாடகம் என்னும் மூவகைக் கலைகள். தாவா-கெடாத. புகழ்க்கலை-புகழாகிய ஆடை என்க. புண்ணியம்-அறம். நிறம்-மார்பு. பூட்சி-உடம்பு. புல்லுதல்-தழுவுதல். துடியிடை: அன்மொழித்தொகை. இன்பம்-பேரின்பம்.