நடனத்தை, - புதல்வா நவிலக் கேள் - மாணவகனே சொல்லக்கேள், - சிட்டன் - பரமசிவன், - சிவாயநம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயம் அற நின்று ஆடுவான் - சிகாரமாதி பஞ்சாக்கரமே திருமேனியாகக் கொண்டு ஆன்மாக்கள் பிறவியறத்தக்கதாக நிருத்தஞ் செய்வன். [எட்டும் இரண்டும் - அகரம் உகரம்.] 31 ஆடும் படிகேள்நல் லம்பலத்தான் ஐயனே நாடுந் திருவடியி லேநகரம் - கூடும் மகரம் உதரம் வளர்தோள் சிகரம் பகருமுகம் வாமுடியப் பார். 32 | (உரை) ஐயனே நல் அம்பலத்தான் ஆடும் படி கேள் - மாணாக்கனே பொன்னம்பலமுடையான் நிருத்தஞ்செய்கிற முறைமையைச் சொல்லுகிறோங் கேள், - நாடுந் திருவடியிலே நகரம் - நாடாநின்ற ஸ்ரீ பாதத்திலே நகார மாகவும், - கூடும் உதரம் மகரம் - பொருந்தப்பட்ட திருவுந்தியிலே மகாரமாகவும், - வளர் தோள் சிகரம் - வளராநின்ற திருத்தோளிலே சிகாரமாகவும், - பகருமுகம் வா - சொல்லப்பட்ட திருமுகத்திலே வகாரமாகவும், - முடிய பார் - திருமுடியிலே யகாரமாகவும் கொண்டருளித் திருநிருத்தஞ் செய்வானென்று விசாரித்தறிவாயாக. 32 சேர்க்கும் துடிசிகரஞ் சிக்கனவா வீசுகரம் ஆர்க்கும் யகரம் அபயகரம் - பார்க்கிலிறைக்(கு) அங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார் தங்கும் மகரமது தான். 33 | (உரை) ஆர்க்குந் துடி சேர்க்குங் (கரம்) சிகரம் - ஒலிக்கின்ற டமருகமேந்திய ஸ்ரீ அத்தத்திலே சிகாரமாகவும், - சிக்கன வீசு கரம் வா - நன்றாக வீசிய ஸ்ரீ அத்தத்திலே வகாரமாகவும், - அபயகரம் யகரம் - அமைத்த ஸ்ரீ அத்தத்திலே யகாரமாகவும், - பார்க்கில் அங்கி இறைக்கு நகரம் - பார்க்குமிடத்து அக்கினியேந்திய ஸ்ரீ அத்தத்திலே நகாரமாகவும், - முயலகனார் தங்கும் அடிக்கீழ் மகரமதுதான் - முயலகனை மிதித்த ஸ்ரீ பாதத்திலே மகாரமாகவும் கொண்டருளித் திருநிருத்தஞ் செய்வானென்றறி வாயாக. 33 |