பக்கம் எண் :

2

ஞானமும் ஆனந்தமுமாகிய சச்சிதானந்தக் குன்றை நமது ஹிருதயத்தில்
தாங்கித் தியானித்து வாழ்வாம்.

     (வி - ரை) 'ஒன்றிலே மூன்றாய் மூன்றுமொன்றதாய்' என்பது
திரித்துவ உபதேசம். அதை மேல்வரும் பாக்களில் விபரிக்கின்றார்.
உவந்து இரக்ஷை என்பது உவந்திரக்ஷை என்று புணர்ந்தது.
உயிர்வரினுக்குறள் மெய்விட்டோடு மென்பது சூத்திரம். மெய் சத்தியம்.
ஞானம் அறிவு. மெய்ஞ்ஞானானந்தமென்பதும் சச்சிதானந்தமென்பதும்
(சத்+சித்+ஆனந்தம்) ஒன்றே. தெய்வத்தின் திரித்துவமாந்தன்மையைக்
கூறியவர் அத்திரித்துவத்தின் குணங்களைச் சத்தியம், ஞானம், ஆனந்தம்
என்பவற்றால் குறித்தார். அக்குணங்களின் மிகுதியைக் குறிக்கக் குன்று
என்று உருவகப்படுத்தினார். தேவாராதனையில் ஹிருதயமும் புத்தியும்
சம்பந்தப்படவேண்டியதால் அகத்துத்தாங்கி யென்றும் சிந்தனைகூடி
யென்றுங் கூறினார்.

   

               வேறு

மூல காரண முதற்பொரு ளெவற்றிற்கு மும்மைக்
கால மாதியீ றிகந்துள வநாதியங் கடவுள்
கோல மாமறை குணிப்பருங் குணங்குறி யமைந்த
சீல நாயகன் றிருவருட் பரவுதுந் தினமே. 3

     (பொ - ரை) சர்வத்துக்கும் மூலகாரணமாகிய முதற்பொருள்,
இறப்பு நிகழ்வு எதிர்வு என்னுந் திரிகாலங்களையும் ஆதி மத்தியம்
அந்தம் என்னும் மூன்று பாகுபாடுகளையும் கடந்து நின்ற அநாதியாகிய
கடவுள், அழகிய பெருமை பொருந்திய வேதமும் அளவிடமுடியாத
குணங்களும் செயல்களும் அமைந்த நல்ல தலைவன். அவனுடைய
திருவருளைத் தினம் தினம் ஸ்தோத்திரிப்பாம்.

     (வி - ரை) 'ஆதி ஈறு' என்பவற்றுள் மத்தியமென்பதுங் கூட்டி
யுரைக்கப்பட்டது. பிறரால் கூறப்படும் ஆதிமத்தியாந்த ரகிதர் என்னும்
கடவுளுக்குரிய பெயரையும் நோக்குக. 'குணங்குறி' யென்றது
குணங்களையும் செய்கைகளையும். இப்பாட்டுக் கலிநிலைத்துறை
எனப்படும். விருத்தக் கலித்துறையென்பதும், கலித்துறை விருத்தமென்பதும்,
காப்பியக் கலித்துறை என்பதுவும் இதுவே. அடி ஒன்றுக்கு ஐந்து சீர்
கொண்டு விருத்தம்போல் அளவுபெற்று வருவது கலிநிலைத்துறை. இதற்கு
வாய்பாடு: - மா-விளம்-விளம்-விளம்-தேமா.

 
   

            வேறு

ஆதி மெய்த்திரு வாக்கொளி யாய்வருங்
காதன் மைந்தனைத் தந்து கருணையாற்
பூத லத்துக் கிரக்ஷை புதுக்கிய
தாதை பாதந் தலைக்கணி யாக்குவாம். 4