பக்கம் எண் :

7

   

              நுதலிய பொருள்

வெற்று நேரப்போக் காய்ப்புகல் வினோதமு மன்று
புற்ற ராவிடம் பொதிந்தசெப் பெனக்கவி புனைந்து
சிற்றின் பத்திறம் திருத்திய காதையு மன்று
மற்றி தாத்தும ரக்ஷணை வழங்குமோர் மருந்தாம். 14

     (பொ - ரை) இந்நூலானது வெறும் பொழுதுபோக்காகச்
சொல்லப்படும் வினோத காதையுமன்று. புற்றின்கண்வாழும் சர்ப்பத்தைத்
தன்னிடத்தே பொதிந்து வைக்கப்பட்ட செப்பைப்போலக் கவிகளால்
அலங்கரிக்கப்பட்டுச் சிற்றின்பத் தன்மையை நல்லதென்று சொல்லும்
வண்ணம் திருத்திவைத்திருக்கும் காதையுமன்று. மற்று இதுதான்
ஆன்மாக்களுக்கு இரட்சிப்பைக் கொடுக்கும் ஒப்பற்ற மருந்தாகும்.

     (வி - ரை) இந்நூலிற் கூறப்புகுந்த விஷயத்தை இக்கவியகத்தே
எதிர் மறையானும் உடன்பாட்டானும் கூறி வலியுறுத்துகின்றார். செப்பு
பார்வைக்கு அழகிதாயிருந்தும் உள்ளே கெடுதலைச்செய்யும் பாம்பை
அடக்கி வைத்திருத்தல்போலச் சிற்றின்பக் காதைகள்
அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. இந்நூல்களிலுள்ள பொருள்
செப்பினுள்ளிருக்கும் பாம்புபோல வென்க. 'ஆடரவப் பெட்டிதனைப்
பணிகாரப் பெட்டியென்றே அகழானெண்ணிப் - பாடுபட அதைத் திறந்து
பாம்பினுக்கே யிரையான பான்மையோல' என்றார் பிறரும். விடம்
எனப்பிரித்து நஞ்சு பொதிந்த செப்பு எனினுமாம்.

 
   

          நூற்பயன்

தீவினை ஜலதிவீழ்ந் தழியும் ஜீவரை
வீவிலாக் கதிக்கரை வீடு சேர்க்குமோர்
தாவரு புண்ணியத் தனி மரக்கலம்
ஜீவர க்ஷணியயாத் திரிகந் தேர்மினோ. 15

     (பொ - ரை) தீவினையாகிய சமுத்திரத்தில் வீழ்ந்து அழிகின்ற
ஜீவகோடிகளை அழிவில்லாத கதிக்கரையாகிய மோக்ஷவீட்டில்
சேர்க்கவல்ல ஒரு கிடைத்தற்கரிய புண்ணிய மயமான ஒப்பற்ற
மரக்கலம் ஜீவ ரக்ஷணிய யாத்திரிகமாகும். இதனை யாவரும் அறியுங்கள்.

     (வி - ரை) தீவினை ஜலதி என்றது பாவசாகரத்தை. அலங்காரம்
உருவகம். இப்பாட்டால் இந்நூலைக் கற்போர் கேட்போர் பெறும்பயன்
கூறப்பட்டது.

 
   

                யாப்பு

முதிர்க டுத்தழை நுகர்ந்திடு மொட்டையின் மூர்க்கர்
கதிவ ழுக்கிய பாழ்ங்கதை கற்றுநாட் கழிப்பர்
புதிய தேனுக ரளியெனப் புனிதர் யாத்திரிகம்
மதிந லந்தரு மமிழ்தெனப் புசித்துள மகிழ்வர். 16