பக்கம் எண் :

6

கூறப்பட்டபடியால் "பாவநாசரிதமாகச் சத்தியந்திகழ்த்தி" என்றார்.
நிண்ணயம் என்பது நிர்ணயம், பாவநாசரிதம் கற்பித கதை. ஆல்
அசைநிலை. இம்மூன்றும் பாட்டும் அறுசீர் ஆசிரியவிருத்தம். வாய்பாடு: -
விளம் - மா-தேமா - விளம் - மா - தேமா.

 
   

ஆக்கிய பாஷைக் கன்றி யவனியிற் பலபா ஷைக்கும்
பாக்கியம் பயந்த தென்னப் பாசுரஞ் சமைந்த தாக
மேக்குயர் காத லாலவ் வித்தக சரிதஞ் சொல்வான்
ஊக்கினன் தமிழில் யானு முசிதமாண் பொருளை யுள்ளி.
12

     (பொ - ரை) முதனூல் ஆக்கப்பட்ட பாஷைக்கேயன்றி
இவ்வுலகத்திலுள்ள பலபாஷைகளுக்கும் அந்நூல் பாக்கியம்
கொடுத்ததுபோல, அதன் கண்ணுள்ள உச்சிதமான சிறப்பமைந்த
விஷயத்தை மனதில் நினைத்து மேலும் மேலும் எழுகின்ற ஆசையினால்
தமிழில் பாசுரமாக அமைத்து அந்த ஞான சரிதத்தைச் சொல்லும்படி
நானும் ஊக்கங்கொண்டேன்.

     (வி - ரை) ஆக்கிய பாஷையென்பது ஆங்கிலம். சத்தியவேதத்திற்
கடுத்தாற்போல் உலகத்திலுள்ள அநேக பாஷைகளில்
மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற நூல் பனியன் ஆசிரியர் இயற்றிய
"பரதேசியின் மோட்சபிரயாணம்" என்னும் நூலாகையால் அவனியில் பல
பாஷைக்கும் பாக்கியம் பயந்ததென்றார். பாசுரம் பாட்டு. 'சொல்வான்
எதிர்கால வினையெச்சம். "உசிதமாண் பொருளையுள்ளி" என்பதற்கு
உச்சிதமான சிறந்த வஸ்துவாகிய கடவுளை மனதில் நினைத்து என்றும்
பொருள் கொள்ளலாம்.

 
   

ஒண்டமிழ் வலவர் வாக்கி னுரங்கொண்டிவ் வுலக காதை
எண்டிசை புகழ நிற்கு மிரக்ஷண்ய வேத போதங்
கொண்டபே ராற்ற லாலே கூறுமிப் பனுவ லென்றுந்
தெண்டிரை வளாகத் தோங்கித் திகழ்வதற் கெவன்கொ
                                      லையம்.
13

     (பொ - ரை) எட்டுத்திசையும் புகழ நிற்கின்ற ரக்ஷண்யவேத
ஞானத்தை இந்த உலகக் கதையானது கொண்டிருக்கின்ற பெரிய
திறமையின் பலனாக நான் கூறுகின்ற இந்தக் காவியம் எக்காலத்தும்
சிறந்த தமிழில் வல்லவர்களுடைய வாக்கில் உரங்கொண்டிருந்து தெளிந்த
அலைகளையுடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தில் என்றைக்கும்
ஓங்கிப் பிரகாசிப்பதற்குச் சந்தேகமென்ன?

     (வி - ரை) இப்பாட்டுள் தாம் இயற்றிய நூல் தமிழுலகத்தில் நிலை
பெற்றோங்குமென்பதற்குக் காரணங் கூறுகின்றார். ஒன் + தமிழ் = ஒள்ளிய
தமிழ். எவன் என்பது வினாவினைக் குறிப்பு. அது தற்காலத்தில் என்ன,
என்னை, ஏன் என்னும் ரூபகங்களில் வரும். 'எவன் என் வினாவினைக்
குறிப்பிழி இருபால்' என்பது சூத்திரம். கொல், அசைநிலைப்பொருளில்
வந்தது. 'கொல்லே ஐயம் அசைநிலைக் கூற்றே' என்பது நன்னூல்.