இரண்டாம் பாகம்
3230.
பெருந்தரு வடியிற் றிட்டி கழித்தெறி
பிடவை யெல்லா
மருத்தவ முடைய வள்ள லகுமதே
யுமக்கீ மான்கொண்
டிருந்துபின் கணவ ராக
வருமவர்க் கீவோ மென்ன
வருந்திலா தமரர் மாத ரெடுத்துவைத்
திருக்கின் றாரால்.
190
(இ-ள்) அன்றியும், தேவ
மகளிராகிய கூறுல் ஹீன்கள் பெரிய அந்தச் சிதுறுத்துல் முந்தஹா வென்னும் மரத்தினது அடியில் திட்டி
கழித்து வீசிய புடவைக ளெல்லாவற்றையும் அருமையான தவத்தை யுடைய வள்ளலாகிய அஹ்மதென்னுந் திருநாமத்தைப்
பெற்ற நபிகட் பெருமானே! உங்களுக்கு ஈமான் கொண்டு பூலோகத்தின்கண் ஜீவித்திருந்து பின்னர்
எங்களுக்கு நாயகராக வருகின்ற அவர்களுக்குக் கொடுப்போமென்று சொல்லி வருந்தாது எடுத்து வைத்திருக்கின்றார்கள்.
3231.
நறைவிரி கனக நாட்டி டனந்தசோ
பனங்க ளீதென்
றறிவுற வானோர் கோமா
னுரைத்தன ரதனைக் கேட்டு
மறைநபி களிப்பா நந்த
வாருதி தன்னை மூழ்கி
யிறையவன் றன்னைப்
போற்றி யாவர்க்கு மியம்பி னாரால்.
191
(இ-ள்) தேவர்களான மலாயிக்கத்து
மார்களின் அதிபதியாகிய அந்த ஜிபுரீ லலைகிஸ்ஸலா மவர்கள் பரிமள மானது மலரப் பெற்ற
சொர்க்க லோகத்தின்கண் நிகழ்ந்த சோபனங்கள் இஃதென்று அறிவானது பொருந்தும் வண்ணஞ்
சொன்னார்கள். அஃதை புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தை யுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார்
நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் கேள்வியுற்று மகிழ்ச்சியாகிய
சந்தோஷ சாகரத்தில் முழுகி யாவற்றிற்கும் இறைவனான ஜல்ல ஷகுனகு வத்த ஆலாவைத் துதித்து
யாவருக்குங் கூறினார்கள்.
3232.
அருளபூ பக்கர் வெற்றி யடலரி
யுமறு கத்தாப்
தெருளுறு முதுமான் மற்றச் செவ்வியோ
ரெவருங் கேட்டுப்
பெருகிய புதுமை யென்னப் பேரலி
தமையும் பெண்மை
யரசையும் பெரிது வாழ்த்தி
யகக்களி பெருகி நின்றார்.
192
(இ-ள்) அவ்வாறு கூற,
காருண்ணியத்தை யுடைய அபூபக்கர் சித்தீகு றலி யல்லாகு அன்கு அவர்களும், விஜயத்தினது வலிமையைக்
கொண்ட சிங்கமாகிய உமறு கத்தாபு றலி யல்லாகு அன்கு அவர்களும், அறிவைப் பொருந்திய உதுமா
னிபுனு அப்பான் றலி யல்லாகு அன்கு அவர்களும், அழகை யுடையவர்களான மற்ற அசுஹாபிமார்க
ளியாவருங் கேள்வியுற்று இஃது ஓங்கிய ஆச்சரிய மென்று சொல்லிக் கீர்த்தியைப் பெற்ற அலி
யிபுனு அபீத்தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்களையும்,
|