இரண்டாம் பாகம்
பதுறுப் படலம்
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
3352.
நெறியொடும் புறுக்கா னன்னேர்
நிகழு மவ்வருடந் தன்னிற்
பெறுகதி றமலா லென்னப்
பெருகிய நோன்பு தன்னை
யுறுதிகொண் டெவர்க்குஞ் செவ்வி
யுறபறு லாக்கி னேனென்
றிறையவ னருளி னாயத் திறங்கிய
தெவர்க்கு மன்றே.
1
(இ-ள்) முறைமை யோடும்
புறுக்கானுல் அலீ மென்னும் வேதத்தினது நன்மை பொருந்திய ஒழுங்குகளானவை நடக்கின்ற முன்னைய மூன்று
யுத்தங்களையு முடைய ஹிஜீறத் திரண்டாவதாகிய அந்த வருஷத்தில், பதவியைப் பெறுகின்ற றமலா னென்
றோங்கிய மாதத்தினது நோன்பை யுறுதி கொண்டு முசிலி மாகிய யாவருக்கும் அழகானது பொருந்தும் வண்ணம்
பறு லாக்கினேனென்று உலகத்திலுள்ள அனைவருக்கும், கடவுளான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் காருண்ணியத்தை
யுடைய ஆயத் தென்னும் வேத வசனமானது இறங்கிற்று.
3353.
உள்ளுறைந் தெவர்க்குந் தோன்றா
துலகெலா நிறைந்த மேலோன்
விள்ளுதற் கரிய வேத வழிமுறை
விதித்த நோன்பை
வள்ளனந் நபியு நாலி யார்களு
மற்று ளோருந்
தெள்ளிய மனத்தி னோடுஞ்
சிறப்புடன் முடித்து வந்தார்.
2
(இ-ள்) ஒவ்வொரு ஜீவ
ராகிகளி னகத்துந் தங்கி ஒருவருக்குந் தெரியாமல் எல்லா வுலகங்களிலும் பூரணப்பட்ட மேன்மையையுடையவனான
ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவானவன் சொல்லுதற் கரிய புறுக்கானுல் அலீ மென்னும் வேதத்தினது தீனுல்
இஸ்லா மென்னும் மெய்ம்மார்க்க நெறியிற் கற்பித்த நோன்பை வள்ளலாகிய நமது நாயகம் நபிகட்
பெருமானார் நபி ஹாமிது அஹ்மது முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களும்,
அபூபக்கர் சித்தீகு றலி யல்லாகு அன்கு, உமறு கத்தாபு றலி யல்லாகு அன்கு, உதுமா னிபுனு அப்பான்
றலி யல்லாகு அன்கு, அலி யிபுனு அபீத் தாலிபு றலி யல்லாகு அன்கு ஆகிய நான்கு யார்களும் மற்ற
அசுஹாபிமார்களும் தெளிந்த இதயத்தோடுஞ் சங்கையுடன் நிறைவேற்றி வந்தார்கள்.
3354.
பறுலெனு நோன்பு நோற்று
வருகையிற் பதினே ழாய
குறைவற வெள்ளி நாளிற் குத்துபாத்
தொழுத பின்னர்
மறுவறு மொற்றர் தம்மில்
பசுபசா வென்னும் வீரர்
முறைவழி தவறா வள்ளன் முன்பணிந்
தெழுந்து நின்றார்.
3
|