பக்கம் எண் :

சீறாப்புராணம்

1312


இரண்டாம் பாகம்
 

3584. மேலுமின் கலிமா வுரைத்துறுந் தீனை

          விரும்புவை யெனின்முகம் மதுதம்

     பாலினிற் கொடுபோய்ப் பருவர றவிர்த்துப்

          பரிவுறுந் தலைமைசெய் குவநீ

     கோலிய பகையை விடுத்துநன் குரையைக்

          கூறெனக் கூறலுங் கொதித்து

     வாலெயி றிலங்க நகைத்தட லிபுனு

          மஸ்வூதுளம் வெகுண்டிட மவுல்வான்.

233

      (இ-ள்) இனிமை பொருந்திய அந்தக் கலிமாவை இனி மேலானாலும் நீ சொல்லிப் பொருந்திய தீனுல் இஸ்ஸாமென்னும் மெய்ம் மார்க்கத்தை விரும்புவாயே யானால் நாங்கள் உன்னை அந்த நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களது சந்நிதானத்திற் கொண்டு போய் உனது துன்பங்களை யொழித்து உன்னைச் சந்தோஷத்தைக் கொண்ட தலைமைத் தனத்தை யுடையவனாகச் செய்வோம். நீ இடங்கொள்ளப் பண்ணிய விரோதத்தை விட்டு நன்மை பொருந்திய அந்தக் கலிமா வசனத்தைச் சொல்லென்று சொன்ன மாத்திரத்தில், அவன் கோபித்து வெள்ளிய தனது பற்கள் பிரகாசிக்கும்படி சிரித்து வலிமையைக் கொண்ட அந்த இபுனு மஸ்வூது றலியல்லாகு அன்கு அவர்களது சிந்தையானது கோபிக்கும் வண்ணஞ் சொல்லுவான்.

 

3585. இறுதியிற் கலிமா வுரையென வெதிரி

          னுரைத்தனை யிழிந்தசா திகளிற்

     றொறுவரின் குலத்துக் குறுமதி யெடுத்துச்

          சொல்லினை யுனைவிசும் பேற்றப்

     பெறுமவ ரிலையென் னிடத்தினி லென்றா

          லியாவர்தா னென்னினிப் பேசார்

     தெறுகொலை விளைத்தி யெனவிழி சிவந்து

          செவிக்கொளா வசையொடு முரைத்தான்.

234

      (இ-ள்) நீ கடைசியில் என்னைக் கலிமாச் சொல்லென்று எனது முன்னர்ச் சொன்னாய், தாழ்ந்த சாதிகளில் இடையரது குலத்திற்குப் பொருந்திய அறிவை யெடுத்து எனக்குச் சொன்னாய், என்னிடத்தில் உன்னைக் கொன்று ஆகாயத்தின்கண் ஏற்றப் பெறுபவர்கள் இல்லை. அப்படி யில்லாதிருப்பதனால் இனி யார் தான் என்ன சொல்லார்கள். எல்லாஞ் சொல்லுவார்கள். ஆதலால் நீ என்னை அழிக்கின்ற கொலைத் தொழிலைச் செய்யென்று இரண்டு கண்களுஞ் செந்நிறமடைந்து செவிகளிற் கொள்ளாத இகழ்ச்சியான வார்த்தைகளோடுங் கூறினான்.