பக்கம் எண் :

சீறாப்புராணம்

1350


இரண்டாம் பாகம்
 

3688. பாதையிற் பறித்த வெற்றிப் பலன்படு பொருள்க ளெல்லா

     மாதவன் காரி தாசேய் முகம்மதி னிடத்தி னீட்ட

     வேதநன் மறையி னுற்ற விதிப்படி தீனர்க் கீந்து

     பூதல மனைத்தும் போற்றப் புகழ்நபி யிருந்தா ரன்றே.

12

      (இ-ள்) அவ்வாறு வந்து சேர்ந்த மகாதவத்தை யுடையவனான ஹாரிதாவென்பவனது புத்திரராகிய சைதுறலியல்லாகு அன்கு அவர்கள் சத்துராதிகளிட மிருந்து வழியிற் பிடுங்கிய விஜயத்தினது இலாபத்தைப் பொருந்திய அந்தப் பண்டங்க ளெல்லாவற்றையும் நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா ஹபீபு றப்பில் ஆலமீன் றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களிடத்திற் கொண்டு வந்து கொடுக்க, கீர்த்தியையுடைய அந்நாயகம் நபிசல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அறிவைக் கொண்ட நன்மையையுடைய புறுக்கானுல் அலீமென்னும் வேதத்திற் பொருந்திய நியமப் பிரகாரம் தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தை யுடைய முஸ்லிங்களுக்குப் பாகித்துக் கொடுத்து இப் பூலோக முழுதுந் துதிக்கும்படி யிருந்தார்கள்.