இரண்டாம் பாகம்
3685.
அடவியி னிருந்த சேனைத் திரளுமச்
சுவமுங் கொண்டு
கடிதினி லெழுந்து மாறாக் கதிர்ப்படைக்
கலன்க ளேந்தி
வடிவுறும் காரி தாதன்
மதலையங் கெதிரி னேகி
நெடிபடு கானஞ் சூழ்ந்த நெறியிடை
மறித்து நின்றார்.
9
(இ-ள்) அவ்வாறு
கேள்வியுற்ற வடிவத்தைப் பொருந்திய ஹாரிதாவென்பவனது புதல்வராகிய செய்துறலியல்லாகு அன்கு அவர்கள்
காட்டிலிருந்த சைனியக் கூட்டத்தையுங் குதிரைக் கூட்டத்தையுங் கொண்டு விரைவிலெழுந்து ஒழியாத
பிரகாசத்தையுடைய யுத்தாயுதங்களைத் தாங்கி அவர்களுக்கு எதிரில் அங்குச் சென்று சிள் வண்டுகளையுடைய
காடானது சூழப் பெற்ற பாதையின்கண் அவர்களை மறித்து நின்றார்கள்.
3686.
பன்னருங் கதியிற் றாவும்
பரியொடுஞ் சேனை யோடு
மன்னபா சுபியா னென்னும் பெயரினன்
வந்து தாக்கி
யுன்னுமுன் சைதுக் காற்றா துடைந்துமற்
றெவையும் போக்கித்
தன்னகங் கலங்கி மக்க மாநக
ரொல்லை சார்ந்தான்.
10
(இ-ள்) அவ்வாறு நிற்க,
வேந்தனான அபாசுபியா னென்று சொல்லும் நாமத்தை யுடையவன் சொல்லுதற் கருமையான வேகத்திற்
பாயா நிற்குங் குதிரைகளுடனும், தனது சைனியங்களுடனும், அங்கு வந்து தாக்கி நினைக்குமுன் சைதுறலியல்லாகு
அன்கு அவர்களது வல்லமைக்கு ஆற்றாமல் தகர்ந்து அவன் கொண்டு வந்த பொருள்க ளியாவற்றையும் அங்கு
விட்டுவிட்டுத் தனது மனமானது பயமுறப் பெற்று விரைவில் திருமக்கமா நகரத்தின்கண் போய்ச் சேர்ந்தான்.
3687.
ஏட்டலர் சோலை சூழி
றாக்குமா நகரைச் சார்ந்த
நாட்டுவா ணிபத்துக் கேற்ற
நன்னயப் பொருள்க ளியாவுங்
கூட்டிய பரியி னோடு மொட்டகைத்
திரளுங் கொண்டு
தீட்டும்வே லவர்கள் சூழ
மதீனமா நகரஞ் சேர்ந்தார்.
11
(இ-ள்) அவர்கள் அவ்வாறு
போய்ச் சேர, செய்து றலியல்லாகு அன்கு அவர்கள் இதழ்களைக் கொண்ட புஷ்பங்களையுடைய சோலைகள்
சூழ்ந்த பெருமை பொருந்திய இறாக்குதேயத்தைச் சேர்ந்த நகரங்களினது வியாபாரத்திற்குத் தகுதியான
நல்ல மேன்மையையுடைய பண்டங்க ளெல்லாவற்றையும், அங்குச் சேர்த்த குதிரைகளுடனும், ஒட்டகத்தினது
கூட்டத்தையுங் கைக் கொண்டு கூர்மைப் படுத்திய வேலாயுதத்தை யுடையவர்களான அசுஹாபிமார்கள் சூழும்படி
திருமதீனமா நகரத்தில் வந்து சேர்ந்தார்கள்.
|