இரண்டாம் பாகம்
3682.
காரிதா தவத்தின் வந்த கண்மணி
செய்தென் றோதும்
வாரிச வதன மன்னர் முகம்மது
பாதம் போற்றிக்
கூரிலைக் கதிர்வே லேந்திக்
கொலைமதக் களிறு போலப்
பூரிகை பேரி யார்ப்பப்
படையொடும் புறப்பட் டாரால்.
6
(இ-ள்) அவ்வாறு
சொல்ல, அந்த ஹாரிதாவென்பவனது தவத்தினால் இவ்வுலகத்தின்கண் அவதரித்து வந்த கண்மணியாகிய
செய்து றலியல்லாகு அன்கு என்று சொல்லும் தாமரை மலரையொத்த முகத்தையுடைய அரசரானவர் நாயகம்
நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது திருவடிகளைத்
துதித்துக் கூரிய இலைகளையும் பிரகாசத்தையுங் கொண்ட வேலாயுதத்தைத் தாங்கிக் கொலைத் தொழிலைச்
செய்கின்ற மதத்தைப் பொருந்திய யானையைப் போலும் பூரிகைகளும் பேரிகைகளும் ஒலிக்கும்படி சேனையோடும்
புறப்பட்டார்கள்.
3683.
கனவரை கடந்து கான்யா றுகள்பல
கடந்து மாறாச்
சினவரிப் புலியு லாவித் திரிவனம்
பலகண் டேகி
நனைபொழில் சூழி றாக்கு நாட்டுக்கும்
வரிசை மக்க
மெனுநக ரதற்கு நாப்ப ணிருந்ததீ
யம்றைச் சார்ந்தார்.
7
(இ-ள்) அவ்வாறு புறப்பட்டு
மேகங்கள் தங்குகின்ற மலைகளைத் தாண்டிப் பலகாட்டாற்றுகளையுந் தொலைத்து ஒழியாத கோபத்தையும்
இரேகைகளையுமுடைய புலிகள் உலாவித் திரிகின்ற பல காடுகளையும் பார்த்துக் கொண்டு சென்று
பூவரும்புகளையுடைய சோலைகள் சூழ்ந்த இறாக்கு தேசத்திற்கும், சங்கையைக் கொண்ட திரு மக்கமென்று
சொல்லும் பட்டினத்திற்கும் மத்தியில் தங்கிய தீயம்றென்னுந் தானத்திற் போய்ச் சேர்ந்தார்கள்.
3684.
கொய்யுளைப் பரியும் வீரர்
குழுவுமோர் வனத்தி னாக்கி
மையலங் களிறு போன்ற காரிதா
மதலை நான்கு
பையல்க ளோடுந் தாமப் பதியிடை
யிருக்குங் காலைப்
பொய்யுறாச் செல்வ மக்கா
புரத்தவர் வருதல் கேட்டார்.
8
(இ-ள்) அவ்வாறு
போய்ச் சேர்ந்த மயக்கத்தைக் கொண்ட அழகிய யானையை நிகர்த்த ஹாரிதாவென்பவனது புதல்வராகிய
செய்து றலியல்லாகு அன்கு அவர்கள் கொய்து கட்டிய புறமயிரையுடைய குதிரைகளையும், வீரர்களான சஹாபாக்களது
கூட்டத்தையும் ஓர் காட்டிலிருக்கும்படி செய்து நான்கு பயல்களோடுந் தாங்கள் அந்தத் தீயம்றென்னும்
நகரத்தின்கண் இருக்கின்ற சமயம் பொய்க்காத செல்வத்தையுடைய திரு மக்கமா நகரத்தின்
காபிர்கள் அங்கு வருவதைக் கேள்வியுற்றார்கள்.
|