பக்கம் எண் :

சீறாப்புராணம்

1370


இரண்டாம் பாகம்
 

3743. பொன்னி லத்துறு மவர்களா மீனெனப் புகல

     வின்னல் போக்கிய முதியவ ரிருகையேத் திரப்ப

     வுன்னு மாமறை வாழ்த்தொடு மொருதுவா வோதி

     மன்னர்மன்னபி கொடுத்தனர் போந்தனர் மனையில்.

15

      (இ-ள்) அவ்வாறு தேய்த்த அரசராதிபரான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் சொர்க்க லோகத்தின்கண் தங்கிய தேவர்கள் ஆமீனென்று சொல்லவும். தங்களது தீமைகளை யகற்றிய முதியோர்களான அசுஹாபிமார்க ளிருகரங்களையு மேந்தியிரக்கவும், கருதுகின்ற பெருமை பொருந்திய புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினது வாழ்த்துதலுடன் ஒப்பற்ற ஓர் துஆவை யோதி அக்குழந்தையைக் கொடுத்து விட்டுத் தங்கள் வீட்டிற்போய்ச் சேர்ந்தார்கள்.

 

3744. தெரித ரத்தின மேழினிற் செழும்புவி புரக்கு

     மரசர் நாயகர் மகள்மனை யடுத்தரும் புதல்வன்

     கரிய மென்சிர மயிரினைக் களைவித்தவ் விடையி

     னிரசி தஞ்சதக் காவென வெடுத்தினி தளித்தார்.

16

      (இ-ள்) அவ்வாறு சேர்ந்த செழிய இவ்வுலகத்தைக் காக்கா நிற்கும் மன்னராதிபரான நமது நாயகம் நபிகட்பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் விளங்கும் வண்ணம் ஏழாவது நாளில் தங்கள் புதல்வியரான காத்தூனே ஜன்னத் பீவிபாத்திமா றலியல்லாகு அன்ஹா அவர்களது வீட்டிற் சென்று அரிய அப்புத்திரரது கருநிறத்தையுடைய மெல்லிய தலைமயிரை நீக்குவித்து அந்த நிறையில் வெள்ளியையெடுத்துச் சதகாவென்று சொல்லி இனிமையோடுங் கொடுத்தார்கள்.

 

3745. கொறியி ரண்டறுத் துடன்அக்கீக் காவினைக் கொடுத்துப்

     பொறையின் மிக்குயர் மருத்துவப் பூங்கொடி தனக்குத்

     தறுகி லாதொரு குறங்குமோர் தமனியக் காசும்

     பெறுக வென்றினி தளித்தனர் தூதரிற் பெரியோர்.

17

      (இ-ள்) அவ்விதங்கொடுத்த றசூல்மார்களிற் பெரியோரான நமது நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல்சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் உடன் இரண்டு ஆட்டையறுத்து அக்கீகாவைக் கொடுத்துப் பொறுமையினால் மிக ஓங்கிய மருத்துவத்தினது பூவைக் கொண்ட கொடி போல்பவளுக்கு அவ்வாட்டிலுள்ள ஒரு தொடையும் ஓர் பொற்காசுந் தறுகாது பெறுவாயாகவென்று சொல்லி இனிமையோடு மீந்தார்கள்.