இரண்டாம் பாகம்
3740.
பொருவி லாமுத
லவன்றிருப் புலியெனு மலிக்குப்
பெருகுஞ் செல்வத்துட்
பிறந்தது மகவெனக் கேட்டு
முருகு லாவுமெய்
புளகெழ முகமதி யிலங்க
வரிசை நன்னபி
வந்தன ரவர்திரு மனையின்.
12
(இ-ள்) ஒப்பில்லாத
முதல்வனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் தெய்வீகந் தங்கிய புலியென்று சொல்லும் அலியிபுனு
அபீத்தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்களுக்கு ஓங்கா நிற்குஞ் செல்வத்தினுள்ளே பிள்ளை பிறந்ததென்று
சங்கையையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி
வசல்ல மவர்கள் கேள்விப்பட்டு அவர்களது அழகிய வீட்டின்கண் கத்தூரி வாசனை யுலாவாநிற்குந் தங்களது
சரீரத்தில் மகிழ்ச்சி யுண்டாகவும், வதனமாகிய சந்திரன் ஒளிரவும் வந்தார்கள்.
3741.
ஆர ணத்திரு நாவினர் சூழ்தர வடுத்த
கார ணக்கட லெனுமுகம்
மதுசெழுங் கரத்திற்
பூர ணக்கதிர் பிறங்கிய
புதல்வனை யேந்திக்
கூரும் வேல்விழி
மடந்தையர் விரைவினிற் கொடுத்தார்.
13
(இ-ள்) புறுக்கானுல் அலீமென்னும் வேதவசனத்தைக்
கொண்ட தெய்வீகந் தங்கிய நாவையுடைய அசுஹாபிமார்கள் சூழும்படி அவ்வாறு வந்து நெருங்கிய காரணமாகிய
சமுத்திரமென்று சொல்லும் நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகி வசல்ல மவர்களது செழிய கைகளிற் கூரிய வேலாயுதத்தைப் போன்ற கண்களையுடைய பெண்கள் வேகத்தில்
பூரண ஒளிவானது பிரகாசித்த அந்தப் புத்திரனைக் கைகளில் தாங்கிக்கொண்டு வந்து கொடுத்தார்கள்.
3742.
தீங்க கற்றிய
மகள்மகன் வலத்திருச் செவியின்
வாங்கு ரைத்திடக்
காதினிக் காமத்தும் வழங்கிப்
பாங்கு றக்கமழ்
தருநறும் பரிமள மெடுத்துத்
தாங்கு மென்சிரத்
தினிலழ குறத்தட வினரால்.
14
(இ-ள்) அவ்வாறு
கொடுக்க, அவர்கள் வாங்கித் தீமைகளைப் போக்கிய தங்கள் புதல்வியரான காத்தூனே ஜன்னத்
பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களின் புதல்வரது தெய்வீகந் தங்கிய வலது காதில்
வாங்கு சொல்லி இடதுகாதில் காமத்துஞ் சொல்லித் தகைமையுறும் வண்ணம் பரிமளிக்கின்ற நறிய
வாசனைத் திரவியங்களை எடுத்துத் தாங்கிய மெல்லிய தலையில் அழகானது பொருந்தும்படித் தேய்த்தார்கள்.
|