பக்கம் எண் :

சீறாப்புராணம்

1368


இரண்டாம் பாகம்
 

3737. செருகு பூங்குழற் செயினபைத் திருநபி மணந்த

     வருட மங்கையர்க் கரசெனும் பாத்திமா வயிற்றிற் 

     கருவெ னத்தரித் தும்பரின் பேரொளி கவின

     முரியு மெல்லிடை தெரிதரக் கருப்பமு முதிர்ந்த.

9

      (இ-ள்) தெய்வீகந்தங்கிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்லமவர்கள் அவ்வாறு சொருகுகின்ற புஷ்பத்தைக் கொண்ட கூந்தலையுடைய ஸயினபு றலி யல்லாகு அன்ஹா அவர்களை விவாக முடித்த அந்த வருடத்தில், பெண்களுக்கு அரசென்று சொல்லும் காத்தூனே ஜன்னத் பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களி னுதரத்தில் கருவென்றுறைந்து தேவலோகத்தின் பெரிய பிரகாசமானது பிரகாசிக்கும் வண்ணம் ஒடிகின்ற மெல்லிய மருங்குலானது விளங்கும்படி கருப்பமும் முற்றியது.

 

3738. கடைந்த வேல்விழி வட்டணித் தெழின்முகங் கசங்க

     நடந்த நாலடி வைத்திடிற் பசந்தமெய் நலியத்

     திடந்த ராதுள மிடைந்திடத் தெரியல்க டுயல

     மடந்தை யர்க்கர சியர்க்கரும் வருத்தமுற் றனவால்.

10

      (இ-ள்) அவ்வாறு முற்றிய பெண்களுக்கு நாயகியாரான காத்தூனே ஜன்னத் பீவி  பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களுக்குக் கடையப்பெற்ற  வேலாயுதத்தை நிகர்த்த இரு கண்களும் வட்ட வடிவாகி அழகிய வதனமானது குழையவும் பசுமையாகிய சரீரமானது நடந்து நான்கடி வைக்கில் தளரவும், மனமானது தைரியத்தைக் கொடாமல் இடையவும், மாலைகள் அசையவும், அரிய வருத்தமானது வந்து சேர்ந்தது.

 

3739. இறம லான்பதி னைந்தினில் வெள்ளியி னிரவின்

     மறுவில் கற்புடை பாத்திமா வெனுந்திரு மடமா

     னறமும் வெற்றியு மோருரு வெடுத்தென வரிதிற்

     பொறையு யிர்த்தன ரொளிதர வொருபுதல் வனையே.

11

      (இ-ள்) அவ்விதம் வந்துசேர, களங்கமில்லாத கற்பையுடைய பாத்திமா றலி யல்லாகு அன்ஹா என்று சொல்லுந் தெய்வீகந் தங்கிய இளம்பிராயத்தைக் கொண்ட பெண்ணானவர்கள் றமலான் மாதம் பதினைந்தாந் தேதியில் வெள்ளிக்கிழமை யிரவிற் புண்ணியமும் விஜயமும் ஒப்பற்ற ஓர் வடிவத்தை எடுத்ததைப் போன்று பிரகாசிக்கும்படி ஓர் புத்திரனை இப்பூமியின் கண் அரிதிற் பெற்றார்கள்.