பக்கம் எண் :

சீறாப்புராணம்

1378


இரண்டாம் பாகம்
 

உகுதுப் படலம்

 

கலிநிலைத்துறை

 

3760. சிகர மேருவிற் சுடரெனச் செழும்பொழின் மதீனா

     நகரி னந்நபி தீனெறி நடத்துமந் நாளின்

     மகர வாரியின் மலிதரு படையுடன் மருவா

     ருகுதில் வந்தெதிர்ந் தமர்விளைத் தவையெடுத் துரைப்பாம்.

1

      (இ-ள்) நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல்  அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா ஹபீபுறப்பில் ஆலமீன் றசூல்சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் மகாமேருப்பருவதத்தினது உச்சியிலிட்ட தீபத்தைப் போலும் செழிய சோலைகளையுடைய திருமதீனமா நகரத்திலிருந்து தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தினது ஒழுங்குகளை நடத்துகின்ற அந்தக் காலத்தில், சத்துராதிகளான காபிர்கள் சுறாமீன்களையுடைய சமுத்திரத்தைப் போலும் பெருகிய சேனையோடு உகுதென்னுந் தானத்தில் வந்து எதிர்த்து யுத்தஞ் செய்த வரலாறுகளை யாம் எடுத்துச் சொல்லுவாம்.

 

3761. மடுவில் வாளைக ளுகடரு மக்கமா நகரின்

     சுடிகை மன்னவன் கறுபுத வியஅபா சுபியா

     னடலு றுந்தனி யரசர்க ளெவரையு மழைத்து

     நடுவு றும்படிக் கருத்தினுற் றவைசில நவில்வான்.

2

      (இ-ள்) வாளைமீன்கள் தடாகங்களிற் குதிக்கின்ற திருமக்கமா நகரத்தினது கிரீடத்தைத் தரித்த அரசனான ஹறுபென்பவன் இப்பூலோகத்தில் தந்த அபாசுபியா னென்பவன் வலிமைமிகுத்த ஒப்பற்ற மன்னவர்களனைவர்களையுங் கூப்பிட்டு நியாயமானது  பொருந்தும் வண்ணந் தனது சித்தத்தி லிருந்தவைகளிற் சிலவற்றைக் கூறுவான்.

 

3762. பதுறின் மாண்டவர் பழிகொளா திருத்தலே வடுவா

     லதனி னும்வடுப் போய்ப்பொரு ளனைத்தையு மிழந்த

     திதுவ தன்றியு மினம்வடு வெதிர்பொரா திருத்தல்

     புதுந றாத்துளித் தொழுகிய செழுமலர்ப் புயத்தீர்.

3

      (இ-ள்) புதிய மதுவானது துளிகளாகச் சிந்தி வடிந்த செழிய புஷ்பங்களினாற் செய்யப்பட்ட மாலையைத் தரித்த தோள்களையுடைய அரசர்களே! நாம் பதுறென்னுந் தானத்திற்