பக்கம் எண் :

சீறாப்புராணம்

897


இரண்டாம் பாகம்
 

     2417. தங்கிய மறைமுகம் மதுவைச் சார்ந்துதீன்

         பொங்கிய நிறைநிலை பொருந்தி னீரினி

         யெங்கடங் குலத்தினுக் கினிய வாருயி

         ருங்களை யலதுவே றுலகி லில்லையே.

7

      (இ-ள்) நீங்கள் வேதமானது தங்கப் பெற்ற நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களைப் பொருந்தித் தீனுல் இஸ்லாமென்னும் அதிகரித்த உறுதிப்பாட்டினை யுடைய நிலைமையிற் சார்ந்தீர்கள். இனி இவ்வுலகத்தின்கண் எங்களது கூட்டத்திற்கு இனிமையை யுடைய நிறைந்த பிராணனானது உங்களை யல்லாமற் பிறிதில்லை.

 

     2418. மக்கமா நகருறை யாசி மாகுலத்

         தொக்கலின் முதியவர்க் குறுகண் மாமணித்

         தக்கமெய்ப் பொருளெமர் தமக்கு ளாவியின்

         மிக்கவர் முகம்மதே யன்றி வேறின்றே.

8

      (இ-ள்) இந்தத் திரு மக்கமா நகரத்தின் கண் தங்கிய பெருமையுற்ற ஹாஷிங் குலத்துக் குடிகளினது முதுமையையுடையவர்களுக்கும் மகத்துவம் பொருந்திய கண்மணி போன்ற தகுதியினது சத்திய வத்துவாகிய எங்களுக்குச் சரீரத்தி னகத்துள்ள பிராணனிலும் மேலானவர் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களே யல்லாமற் பிறிதொன்றுமில்லை.

 

     2419. தெறுபடை வீரத்திற் பொருளிற் செல்வத்தி

          னுறுபவர் நுமக்கெதி ரொருவ ரில்லையாற்

          பெறுமொழி யொன்றுள குறிப்பின் பெற்றியை

          யறிவினோ டிரகசியத் தமைத்தல் வேண்டுமால்.

9

     (இ-ள்) எதிர்த்தோர்களின் சேனைகளை அழிக்கா நிற்கும் வீரத்திலும் கல்விப் பொருளிலும் செல்வப் பொருளிலும் உங்களுக்கு எதிராக அதிகரித்தவர்க ளொருவரு மில்லர். உங்களிடத்தில் யாங்கள் பெறக்கூடிய வார்த்தை யொன்றுள்ளது. அவ்வார்த்தையினது கருத்தின் தன்மையை நீங்கள் இரகசியத்தில் புத்தியோடு அமையச் செய்தல் வேண்டும்.

 

     2420. உரைத்திடு மொழியினை யுறுதி யாகவுள்

         ளிருத்திவே றொருநினை வின்று யாவருங்

         கருத்தொரு கருத்தெனப் படுத்திக் காதுறப்

         பொருத்தியென் மொழியினைப் பொருந்தல் வேண்டுமால்.

10

      (இ-ள்) யான் அவ்வாறு கூறும் வார்த்தைகளை நீங்கள் திடனாக மனதின் கண் ணிருக்கும்படி செய்து பிறிதோர் சிந்தனையு