பக்கம் எண் :

சீறாப்புராணம்

1516


New Page 9

இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) மேலும், அந்த வருடத்தில் சகுபானென்று சொல்லுகின்ற அம்மாதத்தில் ஒப்பற்ற ஜந்தாந் தேதியில் இமாம் உசைன் றலியல்லாகு அன்கு அவர்கள் அழகானது நிறையப் பெற்ற பிரகாசியா நிற்கும் ஆபரணங்களைத் தரித்த பெண்கணாயகம் காத்தூனே ஜன்னத் பீவிபாத்திமா றலியல்லாகு அன்ஹா அவர்களது உதரத்தின்கண் தோற்றி யாவருங் கருதுகின்ற காரணத்தோடும் இப்பூமியின் கண் அவதரித்தார்கள்.

 

4161.  உயிரென னத்திரண் டுவகைகூர் மகள்வயிற் றுதித்த

செயிர றும்புகழ் பேரனை மடிமிசை சேர்த்தி

வயமி குந்தவா ளசன்றனக் களித்தநல் வரிசை

வியனு றும்படி செய்தனர் தூதரின் மேலோர்.     

                                                            4

     (இ-ள்) றசூல்மார்களில் மேன்மையை யுடையவர்களான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிகாத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தங்கள் பிராணனைப்போலுந் திரண்டு அன்புமிகுத்த புதல்வியாரான காத்தூனே ஜன்னத் பீவிபாத்திமா றலியல்லாகு அன்ஹா அவர்களது உதரத்தின் கண்ணிருந்து அவ்வாறு அவதரித்த குற்றமற்ற கீர்த்தியை யுடைய பேரராகிய இமாம் ஹூசைன் றலியல்லாகு அன்கு அவர்களைத் தங்களது மடியின் மீது பொருத்தி வெற்றியான ததிகரிக்கப் பெற்ற வாளாயுதத்தை யுடைய ஹசன் றலியல்லாகு அன்கு அவர்களுக்குச் செய்த நன்மை பொருந்திய சிறப்புகளனைத்தையும் ஆச்சரிய முண்டாகும்படி செய்தார்கள்.

 

4162.  காயும் வெங்குபிர்ப் பகையினை வேரறக் களைந்து

தேய மெங்கணு நீண்டசெங் கோலினைச் செலுத்தி

மேய வெண்புகழ்ச் சுதையினாற் றிசையெலாம் விளக்கி

யாயும் வேதநந் நபிமகிழ்ந் திருக்குமந் நாளில்.       

                                                            5

     (இ-ள்) அவ்வாறு செய்து யாவராலும் ஆராயப்படுகின்ற புறுக்கானுல் மஜீதென்னும் வேதத்தை யுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிது முகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் கோபியா நிற்கும் வெவ்விய காபிர்களது விரோதத்தை வேரறும்படி இல்லாமலாக்கி எல்லா நகரங்களிலுந் தங்களது நீட்சியைக் கொண்ட செங்கோலாட்சியைச் செல்லும்படிசெய்து வெண்மை பொருந்திய கீர்த்தியாகிய சாந்தினால் எண்டிசைகளையும் விளங்கப் பண்ணிச் சந்தோஷத்தோடு மிருக்கின்ற அந்தக் காலத்தில்.