இரண்டாம் பாகம்
தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்
மார்க்கத்தையுடைய முஸ்லிம்களனைவருந் தங்கள் வாய்கள் உலர்ந்து குளிர்ந்த நாக்குகள் வறழ்ந்து
மிகவாக மயங்கி முகங்கள் கருகிச் சரீரம் வருந்தி அருமையான தாகமானது அதிகரிக்கப் பெற்று நடந்துவந்த
கால்கள் சோர்ந்து மனம்வருந்திக் கொடிய வன்மையை யுடைய அந்தப் பாலை நிலத்தைத் தாண்டி அங்கிருந்த
ஒரு சிறிய காட்டினிடத்து இறங்கினார்கள்.
4218.
காச டர்த்தசுர மேவி டுத்தழல் காய்த ரச்சடுதி வந்ததால்
வாச மொய்த்தமகு மூது மெய்த்ததிற லியார்கண் மற்றவர்கண் மன்னவர்
நேச முற்றகர வாள்கள் வைத்துநிறை நீடருத்தொறு நிலாவொளித்
தூசி னைத்தரையின் மேல்வி ரித்துமிகு சோப முற்றுவிழி துஞ்சினார்.
41
(இ-ள்) அவ்வாறு இறங்க, குற்றமானது நெருங்கப் பெற்ற
அந்தப் பாலை நிலத்தை விட்ட வெப்பமானது சுடும்படி விரைவில் வந்ததனாற் கஸ்தூரி வாசனையானது
மொய்க்கப் பெற்ற நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிகாத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களும் யாவராலும் மொய்க்கப்பட்ட வல்லமையையுடைய யார்களும்
மற்ற அரசர்களும் சஹாபாக்களும் தங்கள் விருப்பத்தைப் பொருந்திய கையினிடத்துள்ள வாளாயுதங்களை
அங்கு வைத்துவிட்டு நிறைந்த நீட்சியைக் கொண்ட மரங்களினிழல்கள் தோறும் சந்திரப் பிரகாசத்தையொத்த
தங்கள் வஸ்திரங்களைப் பூமியின் மீது விரித்து அதிக ஆயாசத்தை யடைந்து நித்திரை செய்தார்கள்.
கலிவிருத்தம்
4219.
இன்ன வீரர் துயின்றிடு மெல்வையிற்
றுன்னு காபிரிற் றோன்று மொருத்தன்சூ
துன்னு வஞ்ச நிறைந்த வுளத்தினன்
றன்னி னத்தர்முன் றன்றிறஞ் சாற்றினான்.
42
(இ-ள்) இத்தன்மையாக
வீரர்களான அம்முஸ்லிம்க ளியாவரும் நித்திரை செய்கின்ற சமயத்தில், நெருங்கிய
காபிர்களில் தோன்றிய ஒருவனான சூதை நினைக்கின்ற வஞ்சகம் நிறைந்த மனத்தை யுடையவன் தனது
கூட்டத்தார்களாகிய காபிர்களது முன்னர்த் தனது வல்லமையைச் சொன்னான்.
|