பக்கம் எண் :

சீறாப்புராணம்

1547


இரண்டாம் பாகம்
 

4255.  தந்தி ராதிபர் சேனைகா வலர்படைத் தலைவர்

     மந்தி ராதிபர் திரண்டிரு மருங்கினு மலியக்

     கந்த மான்மதம் பொருந்தியெண் டிசைதொறுங் கமழச்

     சுந்த ரானன மொளிதர வேகினர் தூதர்.

78

     (இ-ள்) அவ்வாறு செல்ல, றசூலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிகாத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தந்திராதிபர்களும், சேனைகாவலர்களும், படைத் தலைவர்களும், மந்திராதிபர்களும் கூடி இரண்டு பக்கத்திலும் பெருகவும், மணத்தைக் கொண்ட கஸ்தூரி வாசனையானது எண்டிசைகளினது எப்பக்கத்திலும் பொருந்திப் பரிமளிக்கவும், அழகிய முகமானது பிரகாசத்தைக் கொடுக்கவுஞ் சென்றார்கள்.

 

4256.  ஆன காலையி னறநெறி தவறிலா வருளார்

     தீ்ன ராகிய வீரரிற் சிறந்தமெய்ப் புகழார்

     மான வாய்மையர் மண்டமர் துடைத்தவை வாளார்

     தான மூறிய சாபிறென் றொருநெடுந் தகையார்.

79

     (இ-ள்) அப்படிச் செல்லுகின்ற சமயத்தில், தருமநெறியில் நின்றும் பிசகாத காருண்ணியத்தை யுடையவர்களும், தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தைக் கொண்டவர்களான வீரர்களில் மேன்மைப்பட்ட உண்மையாகிய கீர்த்தியை யுடையவர்களும், பெருமை பொருந்திய வலிமையாகிய நெருங்கிய யுத்தத்தை ஜெயிக்க கூர்மை தங்கிய வாளாயுதத்தையுடையவர்களுமான ஈகையானது ஓங்கப் பெற்ற சாபிறு றலியல்லாகு அன்கு என்று சொல்லும் ஒப்பற்ற பெரிய கண்ணியத்தை யுடையவர்கள்.

 

4257.  பரிவி னேறுபே ரொட்டகம் பதாகினிக் கடலுள்

     விரைவி னேகிலா தலக்கணுற் றலைந்துமெல் லடியா

     யொருவி நிற்பது கண்டுதம் முயிர்த்துணை யனையார்

     வருதன் மட்டவ ணின்றனர் முகம்மது நபியே.

80

     (இ-ள்) அன்போடு மேறிய பெரிய ஒட்டகமானது அந்தச் சேனா சமுத்திரத்தினுள் வேகமாகச் செல்லாமல் வருத்தமுற்றுக் கலங்கி மெல்லிய நடையாக நீங்கி நிற்பதை நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் பார்த்துத் தங்களது பிராணநேசரைப் போன்றவர்களான அந்தச் சாபிறு றலியல்லாகு அன்கு அவர்கள் வருவதுவரை அவ்விடத்தில் தங்கி நின்றார்கள்.