இரண்டாம் பாகம்
கலிநிலைத்துறை
4398.
சாய்ந்து போகின்ற அகுத்தபு பெறும்பவத் தனைய
னேய்ந்த தன்குலத் தவரொடு மறபினி லேகி
யோய்ந்து வீகின்ற சினத்தினை யவரவர்க் கூட்டித்
தேய்ந்த காபிர்க ளியாரையுந் திரட்டின னன்றே.
43
(இ-ள்) தோற்றோடுகின்ற
அகுத்தபென்பவன் பெற்ற பாவத்தைக் கொண்ட புத்திரனான குயையென்பவன் பொருந்திய தனது கூட்டத்தார்களோடும்
அறபிராச்சியத்திற் சென்று ஓய்ந்து அழிகின்ற கோபத்தைப் பழையபடி அவரவர்களுக்கு நினைப்பூட்டி
மெலிந்த காபிர்களனைவரையு மொன்றாய்ச் சேர்த்தான்.
4399.
மற்றும் வாய்மைய பாசுபி யானொடும் வழங்கிச்
சுற்று வேந்தரை முறைமுறை யொருதொகை சேர்த்திப்
பற்றி லாதபல் குலத்தையுஞ் சூழ்ச்சியுட் படுத்தி
முற்றுஞ் சேனையங் கடனடு விருந்தனன் முரணி.
44
(இ-ள்) அஃதன்றியும்,
வேறு சில சமாச்சாரங்களை அபாசுபியா னென்பவனோடும் பேசித் தங்களைச் சூழ்ந்த அரசர்களை வரிசை
வரிசையாக ஒரு கூட்டமாய்ச் சேரும்படி செய்து அன்பற்ற மற்ற பல கூட்டங்களையுந் தனது ஆலோசனைக்
குள்ளாகச் செய்து முதிர்ந்த அழகிய சேனாசமுத்திரத்தின் மத்தியில் வேறுபட் டிருந்தான்.
4400.
ஆன தான்மத பேதிய ரளவினி லடங்காச்
சேனை யோடுவந் தடருவர் காணினித் திறத்தின்
வான நாயக விஞ்சியாம் வகுத்திட மாட்டேந்
தீனர் சூழ்தர வகழொன்று திருத்துவ மென்றார்.
45
(இ-ள்) ஆனதினால்
சொர்க்க லோகத்திற்கு நாயகமான நபிகட் பெருமானே! சமய வேறுபாட்டை யுடையவர்களாகிய அந்தக்
காபிர்கள் கணக்கி லமையாத சைனியங்களோடும் இனி இங்கே வந்து நெருங்குவார்கள். அவர்கள் வராதபடி
தடுத்துக் கொள்ள நாம் வலிமையோடும் கோட்டை கட்டுவதற்கு வல்லேமல்லேம். ஆதலால் நமது தீனுல்
இஸ்லாமென்னும் மெய்ம் மார்க்கத்தையுடைய அசுஹாபிமார்கள் சூழும் வண்ணம் ஓரகழானது செவ்வையாகத்
தோண்டுவோ மென்று சொன்னார்கள்.
4401.
சொல்லும் வாசக நன்கென யாவருந் துணிந்து
செல்லு லாங்கரத் திருநபி யுடன்வரத் திரண்டே
யெல்லை காணிலா வளநகர்ப் புறத்தினி லேகி
யல்ல லின்றியே புவிதொடத் தொடங்கின ரன்றே.
46
|