பக்கம் எண் :

சீறாப்புராணம்

19


முதற்பாகம்
 

நல்ல சன்மார்க்கத்தின், திகிரி மன்னவர் முன் - ஏகச் சக்கரத்தை யுடைய அரசர்களினது முன்னர், பொருந்த - பொருந்தும்படி, தக்க கூலியும் - தகுதியான கூலி வேலையும், செய்து உண அறிகிலான் - செய்து சாப்பிடத் தெரியாதவன், சரிபோல் - சரியாவதைப் போலும்.

 

பொழிப்புரை

     மிகுந்த அழகை யுடைய தமிழினது புலவர்களின் முன்னர் நான் (இந்நூலைக்) கூறுவது எல்லாத் திசைகளிலும் பூமியிலும் தீவுகளிலும் தனது நீதியானது செல்லும்வண்ணம் நல்ல சன்மார்க்கத்தின் ஏகச் சக்கரத்தை யுடைய அரசர்களினது முன்னர் பொருந்தும்படி தகுதியான கூலி வேலையும் செய்து சாப்பிடத் தெரியாதவன் சரியாவதைப் போலும்.

 

வேறு

 

19. படித்த லத்தெழு கடல்குல கிரிநிலை பதற

   வெடுத்து வீசிய சண்டமா ருதத்தினுக் கெதிரே

   மிடித்து நொந்தசிற் றெறும்பொரு மூச்சுவிட் டதுபோல்

   வடித்த செந்தமிழ்ப் புலவர்மு னியான்சொலு மாறே.

19

பதவுரை

     யான் வடித்த செந் தமிழ் புலவர் முன் - நான், தெளிந்த அழகிய தமிழ்ப் பாடையினது வித்துவான்களின் முன்னர், சொலும் ஆறு - (இந்நூலைக்) கூறு மார்க்க மானது, படி தலத்து - பூமியின் கண், எழுகடல் - ஏழு சமுத்திரங்களும், குலகிரி - அட்ட குலபருவதங்களும், நிலை பதற - தன் நிலைமையானது பதறும் வண்ணம், மாருதத்தினுக்கு எதிரே - பெருங்காற்றிற்கு முன்னர்; மிடித்து நொந்த - வறுமை யுற்று வருந்திய, சிறு எறும்பு - சிறிய எறும்பானது, ஒருமூச்சு விட்டது போல் - ஒரு மூச்சு விட்டதைப் போலும்.

 

பொழிப்புரை

     நான் தெளிந்த அழகிய தமிழ்ப் பாடையினது வித்துவான்களின் முன்னர் (இந்நூலைக்) கூறுமார்க்கமானது பூமியின் கண் ஏழு சமுத்திரங்களும் அட்டகுல பருவதங்களும் தன் நிலைமையானது பதறும் வண்ணம் எடுத்து வீசப் பெற்ற பெருங் காற்றிற்கு முன்னர் வறுமையுற்று வருந்திய சிறிய எறும்பானது ஒரு மூச்சுவிட்டதைப் போலும்.