பக்கம் எண் :

சீறாப்புராணம்

195


முதற்பாகம்
 

464. மாது தன்மகன் முகம்மது வெனும்பெயர் சிலையின்

    காதி னுட்புகக் கருத்துறக் கலங்கிமெய் நடுங்கிப்

    பாதை யிற்புகு முதியவன் பதமலர் கெதியா

    மோதி வீழ்ந்தது முகந்தரை படமுனங் கியதே.

74

     (இ-ள்) அக்கிழவன் அவ்வாறு மாதாகிய இவ்வலிமாவினது புதல்வன் முகம்மதென்று சொல்லும் திருநாமமானது அந்தப் புத்துக்கானின் காதுகளினகம் நுழையவே, சிந்தையானது முழுதுங் கலக்கமுற்று உடல் நடுங்கிப் பாதையின்கண் போகா நிற்கும் அக்கிழவனின் சரணாரவிந்தமே மோட்சமாக அச்சரணங்களில் முகமானது பூமியிற்படும்படி அடித்துப் புரண்டு வீழ்ந்தது. அன்றியும் முணுமுணுத்தது.

 

465. சிலைம ருண்டது கண்டலி மாமனந் திடுக்கிட்

    டலைவி னோடற நரைமுதி யவன்முக நோக்கிக்

    கொலைகொ னீசெலு நெறிகுறு கெனக்கொழுங் கமலத்

    திலையின் மேனடுத் துளியென வழியினின் றிடைந்தாள்.

75

     (இ-ள்) அவ்வாறு அந்தப் புத்துக்கான் மயங்கி விழுந்ததை ஹலிமா அவர்கள் தங்களது கண்களாற் பார்த்து நெஞ்சமானது திடுக்கமுற்று வருத்தத்துடன் முழு நரையையுடைய அக்கிழவனின் முகத்தைப் பார்த்து உனக்கென்ன பழியா? ஆகையால் நீ போகின்ற பாதையின்கண் போய்ச் சேரென்று சொல்லிவிட்டு செழிய தாமரையிலையின்மீது நடுவில் தங்கியிருக்கும் ஒரு நீர்த் திவலையைப் போலப் பாதையின் கண்ணின்று வசக்கேடடைந்தார்கள்.

 

466. இந்த நாளையிற் றேவத மவன்பெய ரியம்ப

    வந்த போதினிற் றலைமுகங் கவிழ்ந்தது மடவா

    யுந்த மைந்தனுக் குடையவன் வேறுள னொருவ

    னந்த நாயக னிடத்தினி லறைகென வகன்றான்.

76

     (இ-ள்) அக்கிழவனானவன் ஹலிமா அவர்களை நோக்கி இளம்பருவத்தையுடைய பெண்ணே! இந்தத் தினத்தில் நாம் அந்த முகம்மதென்பவரின் திருநாமத்தைச் சொல்லும்படி இங்குவந்த சமயத்தில், இங்குள்ள தேவதமானது தனது தலையையும், முகத்தையுங் கவிழ்ந்தது. ஆதலால் உன்னுடைய மகனுக்குச் சொந்தமான கடவுள் வேறே யொருவனுள்ளான். நீ அந்தக் கடவுளிடத்திற் போய் முறையிடுவாயாக வென்று சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டும் நீங்கிப் போயினான்.