பக்கம் எண் :

சீறாப்புராணம்

197


முதற்பாகம்
 

470. பழுதி ருந்தசொற் கேட்டலும் படர்ந்தசெந் நெருப்பி

    லொழுகு மென்மெழு காயுறு கறுத்தழிந் துடைந்து

    கொழும டற்செழுங் கமலமென் மலர்முகங் கூம்பி

    யழுது சஞ்சலத் துறைந்தன னப்துல்முத் தலிபு.

80

     (இ-ள்) அப்துல் முத்தலிபவர்கள் ஹலிமா அவர்கள் சொன்ன குற்றமானது குடியிருக்கப் பெற்ற அவ்வார்த்தைகளைக் காதுகளினாற் கேட்ட மாத்திரத்தில், விரிந்து கிடக்கப் பெற்ற சிவந்த நிறத்தையுடைய அக்கினியின்கண் ஒழுகா நிற்கும் மெல்லிய மெழுகைப் போலப் பொருந்திய நினைவானது அழியப் பெற்றுத் தளர்வுற்றுக் கொழுமையான இதழ்களையுடைய செழிய தாமரையினது மென்மைதங்கிய புஷ்பத்தைப் போன்ற முகமானது ஒடுங்கி அழுது மனக்கவலையி லுறைந்தார்கள்.

 

471. கலவை மான்மத மார்பகஞ் சிவந்தகட் டரளங்

    குலவ வந்தவை யெவைகொலென் றினத்தவர் கூற

    மலையெ னுந்திடக் கடக்கரி யுதிரம்வாய் மடுத்துண்

    டுலவு வேற்கர னுற்றவை யனைத்தையு முரைத்தான்.

81

     (இ-ள்) அப்போது அங்குள்ள பந்துஜனங்க ளானவர்கள் பரிமளச் சேற்றையும் கஸ்தூரியையுமுடைய மார்பினிடத்தில் சிவந்த கண்களிலிருந்து ஒழுகா நிற்கும் நீர்த்துளியாகிய முத்துக்களானவை பிரகாசிக்கும் வண்ணம் இங்கு வந்து பொருந்தியவை யாவை? யென்று கேட்க, அதற்கு மலையென்று சொல்லும்படி வலிமை தங்கிய மதங்களையுடைய யானைகளினது இரத்தத்தை வாய் நிறைத்து அருந்தி விளங்குகின்ற வேற்படை தங்கிய கையினையுடைய அப்துல் முத்தலிபவர்கள் அங்கு பொருந்திய வரலாறெல்லாவற்றையும் எடுத்துச் சொன்னார்கள்.

 

472. மலைய டங்கலுந் தடவியும் வனத்தினை வகிர்ந்துந்

    தொலைவிற் றீவினுஞ் சுற்றியு முகம்மதைத் தொடர்ந்து

    நிலைத ருங்கதிர் படுமுனந் தருகுவ நினது

    நலித லைத்தவி ரெனத்திசை திசைதொரு நடந்தார்.

82

     (இ-ள்) அதுகேட்ட அப்பந்து ஜனங்கள் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களை மலைகளெல்லாவற்றையும் தடவிப்பார்த்தும், காடுகளை வகிர்ந்து பார்த்தும், தொலையாத இடங்களையுடைய தீவுகள் முழுவதிலும் சுற்றிப் பார்த்தும், பின்பற்றிக் கண்டுபிடித்து நிலைபெற்ற இந்தச் சூரியனானவன் அஸ்தமிக்கு முன்னர் கொண்டு வந்து உங்கள்பால் தருகின்றோம். ஆகையால் நீங்கள் உங்களது மெலிவைத்தவிருங்களென்று சொல்லித் திசைகள்தோறும் அந்நபிகணாயக மவர்களைத் தேடும் பொருட்டாக நடந்து சென்றார்கள்.