முதற்பாகம்
479.
கண்ணி ருந்தொளிர்
மணியெனக் கண்டுகண் களித்துட்
புண்ணி ருந்தென
விருந்திடுந் துன்பமும் போக்கி
வண்ண வார்குழ
லாமினா முகம்மதை வாழ்த்தி
யெண்ண மொன்னுநம்
மிடத்திலை யெனச்சிறந் திருந்தார்.
89
(இ-ள்)
அப்போது அழகு பொருந்திய நெடிய கூந்தலையுடைய ஆமினா அவர்கள் தங்களின் கண்களிலிருந்து
பிரகாசியா நிற்கும் மணியைப் போன்ற நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைப்
பார்த்து கண்கள் களிப்படைந்து மனசின்கண் புண்ணானது இருந்தாற் போல இருந்திடும்
வருத்தங்களெல்லாவற்றையு மொழித்து அந்நபிகணாயகத்தை ஆசீர்வதித்து இனி நம்மிடத்தில்
யாதொரு விசாரமும் இல்லையென்று சொல்லிச் சங்கையுடனிருந்தார்கள்.
480.
அடர்ந்த
செவ்வரிக் கொடிபட ரரிவிழி யலிமா
தொடர்ந்த
தன்மனத் திருட்களி வாளினாற் றுணித்து
மடந்தை யாமினா
மனையினில் வரமலர்க் கரத்தா
லிடம்பெ றத்தழீஇ
யிருவரு மொருவரா யிருந்தார்.
90
(இ-ள்)
அந்தச் சமயத்தில் நெருங்கிய சிவந்த இரேகைக் கொடிகள் படர்ந்த கூர்மையான கண்களையுடைய
ஹலிமா அவர்கள் தங்களது மனசின்கண் பற்றிய வியசனமாகிய இருளைச் சந்தோஷமென்னும் வாளினால்
அறுத்து மடந்தைப் பருவத்தையுடைய ஆமினா அவர்களினது வீட்டின்கண் வரவே; அவ்வாமினா அவர்களை
ஹலிமா அவர்கள் தங்களது தாமரை மலர்போலும் கைகளினால் பெருமை பொருந்துபடி கட்டியணைத்து
இருவர்களும் ஒருவராக ஒன்றுபட்ட வார்த்தைகளுடன் கலந்திருந்தார்கள்.
481.
போது லாங்குழ
லாமினா வெனுமணிப் பூவைச்
சாதெ னுங்குலத்
தாளலி மாவுறத் தழுவி
யாத ரத்தொடு
முகம்மதை யெடுத்துமுத் தாடிச்
சீத வொண்பொழிற்
குனைனெனும் பதியினைச் சேர்ந்தாள்.
91
(இ-ள்)
சாதென்று சொல்லும் குலத்திலுள்ளவர்களான அவ்வலிமா அவர்கள் புஷ்பங்கள் உலாவப் பெற்ற
கூந்தலையுடைய ஆமினாவென்று சொல்லும் அழகிய குயிலாகியவர்களை அன்போடுங் கட்டியணைத்து
நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களைக் கைகளினால் எடுத்து முத்தமிட்டுக் குளிர்ச்சி
பொருந்திய ஒள்ளிய சோலைகளையுடைய தங்களது குனையினென்னும் நகரத்தின்கண் போய்ச்
சேர்ந்தார்கள்.
|