பக்கம் எண் :

சீறாப்புராணம்

199


முதற்பாகம்


     476. அந்த ரத்தினின் முழங்கிய மொழிவழி யறிந்து

        சிந்தை கூரவத் திசையினிற் சிலருடன் செலும்போழ்

        திந்து தண்கலை யெண்ணிரண் டுடனிறைந் திறங்கி

        வந்தி ருந்ததொத் திருந்தன ரெழின்முகம் மதுவே.

86

     (இ-ள்) ஆகாயத்தின் கண்ணிருந்து அவ்வாறு ஒலித்த அந்த அசரீரியான வார்த்தையினது வழியை அப்துல் முத்தலிபவர்கள் உணர்ந்து மனமானது கூரும்படி சிலபேர்களுடன் அந்தத் திசையை நோக்கிச் சொல்லுகின்ற சமயத்தில், அழகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் சந்திரனானது குளிர்ச்சி பொருந்திய தனது பதினாறுகலைகளோடும் நிறையப் பெற்று வானலோகத்திலிருந்து மிறங்கி அவ்விடத்தின்கண் வந்திருந்ததை நிகர்த்திருந்தார்கள்.

 

     477. கதலி நீழலி லிருந்தொளிர் குரிசிலைக் கண்டென்

        மதலை தன்னிரு கண்மணி யேமுகம் மதுவே

        யதிரு மைக்கடற் றரளமே யெனவட லரச

        னிதய மீதுறக் களித்துத்தன் னிருகரத் தெடுத்தார்.

87

     (இ-ள்) வெற்றியையுடைய வேந்தரான அப்துல் முத்தலிபவர்கள் அவ்வாறு அந்த வாழை மரத்தினது நிழலின் கண்ணிருந்து பிரகாசியா நிற்கும் பெருமையிற் சிறந்தோரான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைப் பார்த்துச் சிந்தையின் மீது பொருந்தும்படி சந்தோஷித்து எனது புதல்வரான அப்துல்லாவென்பவரின் இரண்டு கண்களிலுமிருக்கும் மணியானவரே! ஒலிக்கின்ற கரிய நிறத்தையுடைய சமுத்திரத்தின்கண் உற்பத்தியாகும் முத்தானவரே! முகம்மதானவரே! என்று சொல்லிப் புகழ்ந்து தங்களது இரண்டு கைகளினாலும் தூக்கி யெடுத்தார்கள்.

 

478. அடைய லர்க்கரி யேறெனு மப்துல்முத் தலிபு

    கொடிமி டைந்தசை புரிசைசூழ் நகரினைக் குறுகிக்

    கடிம லர்க்குழ லாமினா செழுமலர்க் கரத்தில்

    வடிவின் மிக்குயர் முகம்மதைக் கொடுத்தனர் மகிழ்ந்தே.

88

     (இ-ள்) அவ்வாறு தூக்கியெடுத்த சத்துராதிகளாகிய யானைகளுக்கு ஆண் சிங்கமென்று சொல்லா நிற்கும் அப்துல் முத்தலிபவர்கள் கொடிகளானவை நெருங்கி அசையா நின்ற மதில்கள் சூழ்ந்த தங்களது நகரமாகிய மக்காவையணுகி அழகினால் மிக மேன்மை பெற்ற நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களை மகிழ்ச்சியுற்று வாசனை தங்கிய புஷ்பங்களணிந்த கூந்தலையுடைய ஆமினா அவர்களின் செழுமையான தாமரைமலர் போலுங் கைகளிற் கொடுத்தார்கள்.