முதற்பாகம்
பாந்தள்வசனித்த படலம்
கலிநிலைத்துறை
768.
வேங்கை போயபின்
வள்ளலு மனைவரும் விரைவிற்
றாங்க ருஞ்சுமை
யொட்டகம் புரவியுஞ் சாய்த்து
நீங்க ரும்பரற்
கானையா றுகளையு நீந்தி
யோங்க லுஞ்சிறு
திடர்களுங் கடந்துட னடந்தார்.
1
(இ-ள்)
அப்புலியானது போனதன் பின்னர் வள்ளலாகிய நபி முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும்
அங்குள்ள மற்றும் யாவர்களும் ஒன்றுசேர்ந்து சீக்கிரத்தில் தாங்குதற்கரிய சுமைகளையுடைய
ஒட்டகங்களையும் குதிரைகளையுஞ் சாய்த்துக் கொண்டு நீங்கமுடியாத பரற்கற்களையுடைய
காட்டாறுகளையும் தாண்டி மலைகளையும் சிறிய மேடுகளையும் கடந்து நடந்து போயினார்கள்.
769.
துன்று மென்மதி
முகந்துலங் கிடவெகு தூரஞ்
சென்ற பிற்றையிங்
கிவர்களி லொருவர்செப் பினராற்
குன்று தோன்றுவ
ததன்கிழக் கொருகுவ டடுப்ப
வன்றி றற்கொடும்
பாந்தளுண் டவண்வழிக் கெனவே.
2
(இ-ள்)
அவ்வாறு நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களும் வர்த்தகரான மற்றும் பேர்களும் தங்களது
மெல்லிய சந்திரன்போலும் முகமானது பிரகாசிக்கும்படி நடந்து அதிக தூரஞ் சென்றதன் பின்னர்
நெருக்கமமைந்த இவர்களது கூட்டத்திற் பொருந்திய ஒருவர் இவ்விடத்தில் மலையொன்று
தெரிகின்றது. அம்மலையின் கீழ்ப்பக்கத்தில் ஒருகுன்றின் சமீபமாய் அங்குற்ற பாதையின்கண்
கடினமான வலிமையையுடைய ஒரு கொடிய சர்ப்பமுண்டென்று சொன்னார்.
770.
பாந்த ளொன்றுள
தெனுமொழி செவிபுகப் பசுந்தேன்
மாந்தி வண்டிசை
பயிலுமொண் டார்ப்புய வள்ளல்
கூந்தன் மாவுடன்
பின்னிட வருகெனக் குழுவை
நீந்தி முன்னிட
நடந்தனர் கானிடை நெறியின்.
3
|