முதற்பாகம்
(இ-ள்)
அவ்விதம் ஈத்தமரங்கள் தங்கிய பெரிதான பலகாடுகளைத் தாண்டி அப்புறஞ்செல்லவே புஷ்பித்த
மெல்லிய மலர்கள் நெருங்கிய சோலைகள் பக்கத்திற் சூழும்படி சிறப்புப் பொருந்திய நல்ல
குடும்பத்தினது கீர்த்தியுடன் அப்பாதையின்கண் நீண்டகாலமாய் நபிமுகம்மது சல்லல்லாகு
அலைகிவசல்லமவர்கள் வருவார்களென்று காத்துக் கொண்டிருந்த இசுறாவென்னும் நாமத்தையுடைய
பண்டிதனின் மாளிகையானது தெரியும்படி பார்த்தார்கள்.
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
789.
இரைதரு வாரி யேழு
மெடுத்துவாய் மடுத்துண் டோடிச்
சொரிதரு மேகம்
போலச் சொல்லுமெய்ம் மறைக ளென்னுங்
கரையில்வா ருதியை
யுண்டு கருத்தினி லிருத்தி யார்க்குந்
தெரிதர வறிவு மாரி
பொழிந்திடத் திறக்கும் வாயான்.
4
(இ-ள்)
ஒலிக்கின்ற சமுத்திரங்க ளேழையு மெடுத்து வாயினை திறந்தருந்தி ஆகாயத்தின்கண் சென்று
பொழியாநிற்கும் மேகத்தைப்போல அகிலமுழுவதுந் துதிக்கின்ற சத்திய வசனத்தையுடைய
வேதங்களென்னுங் கரையில்லாத சமுத்திரத்தை யருந்திச் சிந்தையின்கண் ணிருக்கச் செய்து
யாவர்களுக்கும் தெரியும் அறிவாகிய மழையைப் பொழிந்திடும்படி திறக்குகின்ற வாயினையுடையவன்.
790.
ஆதமே முதலீ றாக வருநபி யவர்கட்
கெல்லாம்
பேதமொன் றின்றி வந்த
பெருவர மறையின் றீஞ்சொ
லோதிய முறைமை யந்நா
ளொழுகிய வொழுக்க மிந்நாண்
மாதவர் குறிப்புந் தேர்ந்து
வகுத்தெடுத் துரைக்கும் வாயான்.
5
(இ-ள்)
அன்றியும், மூலபுருஷரான நபி ஆதமலைகிஸ்ஸலா மவர்கள் முதலாய்க் கடைசியாக வராநின்ற
நபிமார்களுக் கெல்லாம் யாதொரு வேற்றுமையு மில்லாது ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவின்
பக்கத்திலிருந்து வந்த பெரிய வரத்தினையுடைய வேதங்களின் இனிமை தங்கிய வசனங்களையும்
அவைகள் சொல்லிய முறைமைகளையும் அக்காலத்தில் நடைபெற்ற ஒழுங்குகளையும் இக்காலத்தில்
மகாதவத்தை யுடையவர்களான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களின் அடையாளங்களையும்
தெளிந்து அவைகளைப் பிரித்து எடுத்துக் கூறாநிற்கும் வாயினை யுடையவன்.
|