முதற்பாகம்
791.
பல்வித நூலிற்
றேர்ந்து பலசம யங்க ளாகச்
செல்வழி யனைத்து
நோக்கிச் சென்றுமட் டறுத்துத் தேறிக்
கல்பினி லிருத்தி
மாறாக் கதிப்பதி சேர்க்குந் தூய
நல்வழி தெரிந்து
காண நடுவெடுத் துரைக்கு நாவான்.
6
(இ-ள்)
அன்றியும், அனேகவிதமான சாஸ்திரங்களிற் றேர்ச்சியடைந்து பற்பல மதங்களாகச் சொல்லாநின்ற
மார்க்கங்களெல்லாவற்றிலுஞ் சென்று அவைகளை நன்றாய் பார்த்து அளவறுத்துத் தெளிந்து
மனசின்கண் ணிருக்கச் செய்து நீங்காத மோட்சத்தை யுடைய சுவர்க்கலோகத்தில்
சேர்க்காநிற்கும் பரிசுத்தமான நல்ல மார்க்கத்தை உணர்ந்து அதன் நீதியை யாவர்களும்
அறியும்படி எடுத்துச் சொல்லுகின்ற நாவினை யுடையவன்.
792.
அறிவுநல்
லொழுக்கம் வாய்மை யன்புறு மிரக்க மிக்கப்
பொறைதவங் குணம்வ
ணக்கம் பொருவிலா சார மேன்மைத்
திறநிறை யருணன்
மானந் தேர்ச்சியிற் றெளிந்த கல்வி
குறைவறப் பெருகி
நாளுங் குடிபுகுந் திருந்த நெஞ்சான்.
7
(இ-ள்)
அன்றியும், நன்மைதங்கிய அறிவும் ஒழுக்கமும் உண்மையும் அன்புபொருந்திய கருணையும், அதிகப்
பொறுமையும் தவமும் குணமும் தெய்வவணக்கமும் ஒப்பில்லாத ஆசாரமும் மேன்மையான வலிமையும்
நிறைந்த அருளும் நல்ல அபிமானமும் தேர்ச்சியினால் தெளிவுபெற்ற கல்வியும் குறைவில்லாது
அதிகரித்து எந்நாளும் வாசமாக நுழைந்து இருக்கப் பெற்ற நெஞ்சினை யுடையவன்.
793.
தருந்தரு வனைய
செங்கைத் தனபதி யிசுறா வென்னும்
பெருந்தவ முடைய
வள்ளல் பிறங்கொளி தவழு மாடத்
திருந்தன னிருந்த
போதி லெழுகதிர் துகளான் மூடிப்
பரந்திடும் வரவு
நோக்கிப் பார்த்ததி சயித்து நின்றான்.
8
(இ-ள்)
எண்ணியவெல்லாந் தருகின்ற கற்பக விருட்சத்தைப் போன்ற சிவந்த கையினைப் பொருந்திய
குபேரனான இசுறாவென்னும் பெரியதவத்தையுடைய வள்ளலாகிய அவன் பிரகாசியாநின்ற ஒளியானது
தவழாநிற்குந் தனது மாளிகையின் மேன்மாடத்தில் இருந்தான். அவ்விதமிருக்கின்ற சமயத்தில்
நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களும் மற்றும் வியாபாரிகளும் தங்களது குதிரை முதலிய
மிருகங்களை நடத்துதலினால் அந்நடையின் கண்ணிருந்தெழும்பா நிற்கும் தூசியானது எவ்விடத்தையும்
மூடிப்பரவிடும் வரவைக் கண்டு அதிசயித்து அவ்வழியைப் பார்த்தவனாகவே நின்றான்.
|