முதற்பாகம்
794.
மெய்த்தவம்
பொருந்து மக்கா புரத்துறு வேந்தர் கொல்லோ
பத்திவிட்
டொளிர்சா மென்னும் பதியுடைத் தலைவர் கொல்லோ
முத்தவெண் மணியிற்
றோன்று முகம்மதின் வரவு கொல்லோ
வெத்தலத் தவரோ
விங்ங னெதிர்ந்தவ ரென்று நின்றான்.
9
(இ-ள்)
அவ்வாறுநின்ற அவ்விசுறாவானவன் இவ்விடத்தில் எதிர்த்து வரப்பட்டவர்கள் உண்மையான
தவத்தைப் பொருந்திய மக்கமா நகரத்தின்கண் வாசஞ்செய்யும் அரசர்களோ வரிசைவிட்டுப்
பிரகாசியாநிற்கும் சாமென்னும் நகரத்தையுடைய தலைவர்களோ முத்தமாகிய வெள்ளிய மணியின்கண்
உதயமாகும் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் வரவினது மனிதர்களோ? அல்லது
வேறெந்த நகரத்தை யுடையவர்களோ என்று ஆலோசித்துக் கொண்டு நின்றான்.
795.
ஒட்டகம் புரவி
தூர்த்திட் டுறுதுக ளுதயன் மாய
மட்டறப் பொலிந்து
தோன்றி வருமவர் தமக்கு மேலா
யிட்டதோர் கவிகை
மேக மெழிலுறத் துலங்கக் கண்டு
கட்டிய மாலைத்
திண்டோள் கதித்தெழப் புளகம் பூத்தான்.
10
(இ-ள்)
அவ்விதம் நிற்கவே ஒட்டகம் குதிரை முதலிய மிருகங்கள் தூர்த்து அதிலுண்டாகுந் தூசியினால்
சூரியனது பிரகாசமானது மறையும் வண்ணம் அளவில்லாது பெருகித் தோற்றமுற்று வருகின்ற
அக்கூட்டத்தார்களுக்கு மேலாக இட்ட ஒப்பற்ற மேகக்குடையானது அழகுபொருந்தும்படி ஒளிரப்பார்த்து
புஷ்பங்களினாற் கட்டியமாலையை யணிந்த திண்ணிய புயங்க ளானவை பூரித்தெழும்பும்படி
மகிழ்ச்சியடைந்தான்.
796.
வேதவா சகத்தி
லீசா விளம்பிய வசனந் தேர்வான்
கோதறு கரிய மேகக்
குடைநிழ றொடர்ந்து வந்த
பாதையோர் தம்மை
நீங்காப் பரிவினை நோக்கி நோக்கித்
தீதறு முகம்ம
தென்னத் தெளிந்தனன் செவ்வி யோனே.
11
(இ-ள்)
அன்றியும், முன்னர் நபி ஈசா அலைகிஸ்ஸலாமவர்கள் வேதவசனத்திற்கூறிய வார்த்தைகளைத்
தெளிந்தவனான அழகிய அவ்விசுறாவென்பவன் குற்றமற்ற கரியநிறத்தையுடைய மேகக்குடையினது நிழலானது
பின்பற்றிவந்த அந்தப் பாதையிலுள்ள அக்கூட்டத்தார்களை மாறாத அன்பினால் பார்த்துப்
பார்த்து தீமையானது ஒழியப் பெற்ற நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் தானென்று
மனசின்கண் தேறினான்.
|