பக்கம் எண் :

சீறாப்புராணம்

428


முதற்பாகம்
 

1106. நறவு சிந்திடக் கனியொடு சூதங்க ணடுவார்

     நிறையும் பொற்சுளை முட்புறக் கனிநிரைத் திடுவார்

     மறுவின் மாதளைக் கனியொடும் பூவொடும் வனைவார்

     செறிதி ரட்கொழு விஞ்சியுங் கனியொடு சேர்ப்பார்.

10

     (இ-ள்) அன்றியும் தேனைச் சொரியும் வண்ணம் பழங்களுடன் மாமரங்களை நட்டுவார்கள். பெருகா நிற்கும் பொன் போன்ற சுளைகளையுடைய பலாப்பழங்களை வரிசைப் படுத்திக்கட்டி வைப்பார்கள். குற்றமற்ற பூவோடும் கனியோடும் மாதுளைச் செடிகளினால் அலங்கரிப்பார்கள். மிகுந்த திரளாகிய கொழுவிஞ்சியையும் பழங்களோடு சேர்த்து வைப்பார்கள்.

 

1107. வன்ன பேதபட் டாடைகொய் தணிநிரை வனைவார்

     பொன்னி னன்மலர் மாலைக டுயரறப் புனைவார்

     நன்ன யம்பெற நறுக்கிய நறுக்குநாற் றிடுவார்

     துன்னு வெண்கதிர்க் கற்றைபோற் கவரிதூக் குவரால்.

11

     (இ-ள்) அன்றியும், வேற்றுமையுற்ற சித்தரிப்புகளையுடைய பட்டு வஸ்திரங்களைக் கொய்து வரிசைவரிசையாய் அலங்கரிப்பார்கள். துன்பமானதறும்படி பொன்னிறமமைந்த நல்ல புஷ்பமாலைகளை வனைவார்கள். மிகுந்த மேன்மை பெறும் வண்ணம் நறுக்கப் பெற்ற நறுக்குகளைத் தூக்குவார்கள். நெருங்கிய வெள்ளிய கிரணக்கற்றைகளைப் போலக் கவரிகளை நாற்றுவார்கள்.

 

1108. முல்லை சண்பகம் பாடலஞ் செவ்விதழ் முளரி

     மல்லி கைமடற் கைதைமா மகிழ்மருக் கொழுந்து

     பல்ல வத்தொடு நிரைநிரை பனமலர் தொடுத்தாங்

     கெல்லை யில்லெனத் தூக்குவ ரெழில்விளங் கிழையார்.

12

     (இ-ள்) அன்றியும், அழகானது பிரகாசியா நிற்கும் ஆபரணங்களையுடைய பெண்கள் முல்லை, சண்பகம், பாடலம், செவ்விய இதழ்களின் தாமரை, மல்லிகை, மடல்களமைந்த தாழை, பெருமை தங்கிய மகிழ், முதலிய பலவிதப் புஷ்பங்களை மருக் கொழுந்துகளோடும் தளிர்களோடும் வரிசை வரிசையாக மாலையாய்க் கட்டி அந்தத் திருமக்கமா நகரத்தின்கண் இடமில்லை யென்று சொல்லும் வண்ணம் தூக்குவார்கள்.

 

1109. சால வெண்முகைப் புன்னையின் றண்மலர் தொடுத்து

     நால விட்டதிற் றும்பிக ணடுநடு வதிந்த

     கோல மாக்கட லீன்றமுத் திலங்கிடக் கோத்து

     நீல மாமணி யிடையிடை தொடுத்தன நிகர்த்த.

13