பக்கம் எண் :

சீறாப்புராணம்

469


முதற்பாகம்
 

      (இ-ள்) சயினபென்று சொல்லும் இரத்தினத்தை அவ்வாறு பெற்ற வலம்புரிச் சங்கையொத்த சத்தியத்தை யுடைய மேன்மையான புண்ணியத்தைக் கொண்ட மாதாகிய கதீஜாநாயகியவர்கள் குயில்போலும் வார்த்தைகளை யுடைய றுக்கையாவைப் பெற்று உம்முகுல்தூமைப் பெற்றுப் பின்னர்க் குற்றமற நான்காவது காசீமென்று சொல்லும் திருநாமத்தையுடைய செம்மலான ஓராண்பிள்ளையைப் பெற்றுப் பின்னர் இனிமையுறும் வண்ணம் தையிபென்னும் ஓராண்பிள்ளையைப் பெற்று தாகிறென்ற ஆண் குழந்தையும் பெற்றார்கள்.

 

1218. மன்றல்கமழ் முகம்மதற்கை யேழாண்டு

         நிறைந்ததற்பின் மறுவி லாத

     மின்றவழ்வ தெனவொளிருங் கதீசாநா

         யகியுதரம் விளங்கச் சோதி

     துன்றுமணி யெனப்பூவின் மடந்தையர்க்குஞ்

         சுவனபதித் தோகை மார்க்கு

     மென்றுமர செனவிருப்பப் பாத்திமா

          வெனுமயிலை யீன்றா ரன்றே.

3

      (இ-ள்) கஸ்தூரி வாசனை கமழா நிற்கும் காத்திரத்தை யுடைய நபிகள் பெருமான் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கு முப்பத்தைந்து வயது பூரணமான பிற்பாடு குற்றமற்ற மின்னானது தவழுவதைப் போலும் பிரகாசிக்கும் கதீஜாநாயகியவர்கள் தங்களின் வயிறானது விளங்கும் வண்ணம் பிரபை நெருங்கப் பெற்ற இரத்தினத்தைப் போல இப்பூலோகத்தின் கண்ணுள்ள பெண்களுக்கும் சுவர்க்க லோகத்திலுள்ள பெண்களுக்கும் எந்நாளும் அரசென்று சொல்லும்படியிருக்க பாத்திமா றலியல்லாகு அன்ஹாவென்று சொல்லும் ஓர் மயிலானவர்களைப் பெற்றார்கள்.

 

கலிநிலைத்துறை

 

1219. ஆதி நாயகன் றிருவுளத் தமரர்க ளிறங்கிப்

     பூத லத்தினி லறமெனுந் தலநடுப் புகுந்து

     சோதி யெங்கணும் பரந்திடக் ககுபத்துல் லாவைத்

     தீதி லாதுறச் சுவனமா மணத்தொடுஞ் செய்தார்.

4

      (இ-ள்) யாவற்றிற்கும் முதன்மையான ஜல்லஜலாலகுவத்த ஆலாவின் திவ்விய சித்தத்தின்படி தேவர்களான மலாயிக்கத்து மார்கள் ஆகாயலோகத்தை விட்டும் இறங்கிப் பூலோகத்தினிடத்தில் ஹறமென்று சொல்லும் நடுத்தலத்தில் புகுந்து பிரபையானது எவ்விடங்களிலும் பரவும் வண்ணம் கஃபத்துல்லாவைச் சொர்க்கலோகத்தின் மகத்தாகிய பரிமளத்துடன் பொருந்தும்படி குற்றமறச் செய்தார்கள்.