முதற்பாகம்
1282.
மடங்க லேறெனு முகம்மதும்
வரிபரந் திருண்ட
விடங்கொள் வேலினை
நிகர்த்துமை பொருவிழி மயிலு
முடன்க லந்தினி
தழைத்தனர் வருகவென் றுணர்வு
துடங்கு மும்மறை தெளிந்தவற்
குரைத்தனன் றூதன்.
41
(இ-ள்) அவ்விதம்
எழுந்து போன தூதனாகிய வேலையாளன் ஆண்சிங்கமென்று சொல்லும் நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு
அலைகிசவல்ல மவர்களும் இரேகைகள் படர்ந்து கறுத்தவிடத்தைக் கொண்ட வேலாயுதத்தைப் போன்று மையானது
பொருந்திய கண்களையுடைய மயிலாகிய கதீஜாநாயகியவர்களும் ஒருவரோடொருவர் உடன் கலந்து உன்னை
இனிமையுடன் கூப்பிட்டார்கள். வருவாயாகவென்று அறிவானது தொனங்கா நிற்கும் முன்னுள்ள தௌறாத்து,
இஞ்சீல், சபூறென்னும் மூன்று வேதங்களையுங் கற்றுத் தெளிந்தவனான அவ்வுறக்கத் தென்பவனுக்குச்
சொன்னான்.
1282.
பழுதி லாக்குலப்
பாவைதம் பாலினிற் பரிவா
யெழுக வென்றன ரென்றசொற்
சிரமிசை யேத்தி
வழுவி லாமறை வொறக்கத்தென்
றோதிய வள்ளற்
றழுவு மெய்க்கதிர்
முகம்மது மனைவயிற் சார்ந்தான்.
42
(இ-ள்) குற்றமற்ற
வேதங்களை யுணர்ந்த உறக்கத்தென்று சொல்லிய வள்ளலானவன் பழுதில்லாத மேன்மையையுடைய பாவையாகிய
கதீஜாநாயகியவர்களின் பக்கத்தில் அன்போடும் எழும்புவாயாக என்று சொன்னார்களென்று
சொல்லிய வார்த்தைகளைத் தலையின்மீது கொண்டு தழுவுகின்ற சத்தியப் பிரகாசத்தையுடைய நாயகம்
நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களினது வீட்டின்கண் வந்து சேர்ந்தான்.
1283.
கற்ற வேதியன்
வருதலுங் கிளிமொழிக் கதீசா
பொற்றொ டிக்கரஞ்
சாய்த்திவ ணுறைகெனப் புகன்று
மற்ற டப்புய முகம்மனது
வரையிடைப் புதுமை
யுற்ற செய்தியுண்
ரறிகவென் றுரைத்தார்.
43
(இ-ள்) வேதங்களைப்
படித்த வேதியனான அவ்வுறக்கத்தென்பவன் அவ்வாறு வந்த மாத்திரத்தில் கிளிபோலும் வார்த்தைகளையுடைய
கதீஜாநாயகியவர்கள் தங்களின் பொன்னாலாகிய வளையல்களையுடைய கையை அசைத்து இவ்விடத்தில்
தங்கியிருப்பாயாகவென்று சொல்லித் தங்களின் நாயகரான வலிமையமைந்த விசாலமாகிய தோள்களையுடைய
நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் ஆச்சரியமாக ஹிறாமலையின்கண் அடைந்த சமாச்சார
முண்டுமென்று சொல்லி அதை நீ அவர்களிடத்தில் கேட்டு அறிவாயாகவென்று சொன்னார்கள்.
|