பக்கம் எண் :

சீறாப்புராணம்

492


முதற்பாகம்
 

1278. தாங்கு மெய்ப்பொரு ளறிவருள் குணந்தய விரக்க

     நீங்கி டாதறம் பெருகிட வளர்க்குநன் னெறியீ

     ரோங்கு மானிலத் திடத்துறை பவர்களா லுமக்குத்

     தீங்கு றாதென வுரைத்தனர் மடந்தையர் திலதம்.

38

      (இ-ள்) அவ்விதம் நீக்கிய பெண்களிற் றிலதமாகிய கதீஜாநாயகியவர்கள் தாங்கா நிற்கும் சத்தியப் பொருள் அறிவு, அருள், குணம், தயவு, இரக்கமாகிய இவைகள் நீங்காது புண்ணியமானது அதிகரிக்கும்படி வளர்க்குகின்ற நல்ல சன்மார்க்கத்தை யுடையவர்ளே! உங்களுக்கு ஓங்கா நின்ற பெரிய இந்தப் பூலோகத்தின்கண் தங்கியிருப்பவர்களினால் யாதொரு தீமையும் வந்து சாராதென்று சொன்னார்கள். 

 

1279. சிந்து தேன்மொழிச் செழுங்குயில் தூதெனுந் திருப்பேர்

     வந்த தாமெனத் தெருளுற முகம்மது நயினா

     ருந்து வெங்குபிர் களைவதித் தரமென வுயர்வா

     னிந்து நேரிரு ளொடுக்கிவிண் ணெழுந்தன னிரவி.

39

      (இ-ள்) அப்போது சூரியனானவன் தேனைச் சொரிகின்ற வார்த்தைகளையுடைய செழிய குயிலாகிய கதீஜா நாயகியவர்கள் தங்களின் நாயகருக்கு றசூலென்று சொல்லும் திருநாமம் வந்ததாமென்று சொல்லித் தெளிவடையவும், ஆண்டவர்களான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் ஓங்கா நிற்கும் வெவ்விய குபிரானவர்களை இல்லாமற் செய்வது இம்முறைதானென்று சொல்லவும், உயர்ச்சியுற்ற ஆகாயத்தின் கண்ணுள்ள கரியைப் போன்ற அந்தகாரத்தை ஒடுங்கும் வண்ணம் செய்து வானத்தின்கண் ணெழும்பினான்.

 

1280. நிறக்க ருங்கழு நீர்குவி தரநிறை வனசந்

     திறக்க மெல்லிதழ் வெய்யவ னெழுந்தபின் றிருவு

     மொறக்கத் தென்னுமவ் வேந்தனைக் கொணர்கென வொருவ

     னறக்க டும்விசை கொண்டெழுந் தேகின னன்றே.

40

      (இ-ள்) கரிய பிரகாசத்தையுடைய ஆம்பன் மலர்கள் குவியவும் தாமரைமலர்கள் நிறைந்த தங்களின் மெல்லிய இதழ்களைத் திறக்கவும் அவ்வாறு சூரியனானவ னெழும்பின பிற்பாடு இலக்குமியாகிய கதீஜா நாயகியவர்களும் நபி றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் உறக்கத்தென்று சொல்லும் அவ்வரசனானவனைக் கூட்டிக் கொண்டு வருவாயாகவென்று கட்டளைசெய்ய, ஒரு வேலையாளன் மிகவும் அதிகவிசை கொண்டு எழும்பி அவ்வுறக்கத் திருக்கும் வீட்டினது திசையை நோக்கிப் போயினான்.

s