பக்கம் எண் :

சீறாப்புராணம்

53


முதற்பாகம்
 

தலைமுறைப்படலம்

 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

99. மருவிரி வாவி செந்தா மரைமலர்க் கைக ளேந்தச்

   சொரிமதுச் சிந்துஞ் சந்தத் துடவைசூழ் மதினாத் தன்னிற்

   றெரிதர வரசு செய்து தீனிலை நிறுத்திச் செல்வந்

   தருநபி யிறசூ லுல்லா தலைமுறை தோற்றஞ் சொல்வாம்.

1

     (இ-ள்) பரிமளமானது விரியப்பெற்ற தடாகங்கள் சிவந்த தாமரைப் புஷ்பங்களாகிய கரங்களை ஏந்தும் வண்ணம் பொழிகின்ற நறவத்தைச் சொரியா நிற்கும் சந்தனச் சோலைகள் சூழ்ந்த திருமதீனா நகரத்தில் விளங்கும்படி அரசு செய்து தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தை நிலையாக நிற்கப் பண்ணிச் செல்வத்தைத் தந்த அல்லாகு சுபுகா னகுவத்த ஆலாவின் றசூலான நாயகம் நபிகட் பெருமானார் நபி ஹபீபு றப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் தலைமுறையினது தோற்றத்தை யாம் கூறுவாம்.

 

100. தெரிபொரு ளரிய வேதத் துட்பொருட் டெளிவ தாக

    வருபொரு ளாதி பாரின் முகம்மதை விளக்கஞ் செய்ய

    பரிவுறு மனுவா தத்தைப் படைக்கமண் ணெடுத்து வாவென்

    றுரைதர இசுறா யீலு முவந்துமண் ணெடுத்துப் போந்தார்.

2

(இ-ள்) யாவற்றையும் விளங்கும் பொருளும் அருமையான வேதங்களின் அகப்பொருளும் தெளிவாய் எவ்விடத்தும் தோற்றமாகா நிற்கும் பொருளுமான அனைத்திற்கும் முதன்மையாகிய அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவானவன் இப்பூலோகத்தின் கண் நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை விளக்கஞ் செய்வதற்காக வேண்டி அன்புற்ற மனுவாகிய மூலபிதாவான நபி ஆதமலை கிஸ்ஸலா மவர்களைச் சிருட்டிக்க மண்ணெடுத்துக் கொண்டு வாருமென்று உத்திரவு செய்ய, இசுறாயீல் அலைகிஸ்ஸலா மவர்களும் உவப்புற்று மண்ணையெடுத்துக் கொண்டு போனார்கள்.

 

101. கதிர்வடி வொழுகி நின்ற கபீபுமெய் வகுக்க வேண்டி

    விதியவன் ஜபுற யீலை விரைந்துமண் கொடுவா வென்றான்

    அதிபெறு மதீனாத் தன்னிற்று றூயதோ ரிடத்திற் றோன்றி

    யிதமுற வெடுத்துப் போந்தா ரிமையவர் தலைவ ரன்றே.

3