பக்கம் எண் :

சீறாப்புராணம்

560


முதற்பாகம்
 

மிகவும் வசக்கேடடைந்து மரித்துப் பிரகாசத்தைக் கொண்ட இடங்களை யுடைய சொர்க்கலோகத்தின்கண் குடிபுகுதும் வண்ணம் போய்ச் சேர்ந்தார்கள்.

 

1474. தந்தையு முடன்பிறந் தவளுந் தாயரு

     மிந்தவல் வினையினா லிறந்திட் டாரென

     மந்தரப் புயனம்மா றென்னு மன்னவர்

     சிந்தையிற் சூழ்ச்சியொன் றுன்னித் தேறினார்.

135

      (இ-ள்) அப்போது மலைபோலும் புயங்களை யுடையவரான அம்மாறென்று சொல்லும் அரசரானவர் தமது பிதாவும், சகோதரியும், மாதாவும் இந்தக் கொடிய செயலினால் மரித்தார்களென்று சொல்லி ஓருபாயத்தை மனசின்கண் நினைத்துத் தெளிவடைந்தார்.

 

1475. வாயினி லொன்றுந்தன் மனத்தி லொன்றுமத்

     தீயினுங் கொடியவ ரிடத்திற் செப்பியே

     மேயதுன் பனைத்தையும் விலக்கி வில்லிடுஞ்

     சாயக மெனநபி யிடத்திற் சார்ந்தனர்.

136

      (இ-ள்) அவ்வாறு தெளிவடைந்த அம்மாறென்பவர் நெருப்பிலும் அதிகக் கொடியவர்களான அந்தக் காபிர்களினிடத்தில் தமது வாயிலொன்றும் மனசிலொன்றுமாகச் சொல்லிப் பொருந்திய வருத்தங்களெல்லாவற்றையும் தவிர்த்து வில்லின் கண் இடா நிற்கும் சரத்தைப் போல நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள்.

 

1476. மாதவ ரிடம்புகுந் தமரர் வாழ்த்திய

     பாதபங் கயமல ரிறைஞ்சிப் பற்றொடுங்

     கோதறு தீனிலை நிறுத்துங் கொற்றவர்

     சீதவொண் கட்கடை யருவி சிந்தினார்.

137

      (இ-ள்) குற்றமற்ற தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தை நிலையாக நிற்கச் செய்யும் அரசராகிய அம்மாறென்பவர் மகாதவத்தை யுடையவர்களான நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களினிடத்தில் அவ்வாறு போய்ச் சேர்ந்து தேவர்களாகிய மலாயிக்கத்துமார்கள் வாழ்த்துகின்ற அவர்களின் சரணமாகிய தாமரைப் புஷ்பங்களை அன்புடன் வணங்கிக் குளிர்ச்சி தங்கிய ஒள்ளிய இருகடைக் கண்களிலு மிருந்து அருவியாகிய நீரைச் சொரிந்தார்.

 

1477. அழுதவர் திருமுக நோக்கி யங்கையாற்

     செழுமலர்க் கண்ணினீர் துடைத்துத் தீயவர்க்

     குழுவினைக் கடந்திவ ணடைந்த கொள்கையை

     மொழியென வுரைத்தனர் முதல்வன் றூதரே.

138