பக்கம் எண் :

சீறாப்புராணம்

561


முதற்பாகம்
 

      (இ-ள்) அப்போது யாவற்றிற்கும் முதல்வனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் தூதராகிய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்விதம் அழுதவரான அம்மா றென்பவரின் அழகிய முகத்தைப் பார்த்து அவரின் செழிய தாமரைமலர் போன்ற கண்களினது நீரைத் தங்களின் உள்ளங்களையினால் துடைத்து நீவிர் கொடியவர்களாகிய அந்தக் காபிர்களின் கூட்டத்தைத் தாண்டி இவ்விடத்திற்கு வந்த செய்கையைச் சொல்லுமென்று கேட்டார்கள்.

 

1478. பெற்றவ ரிருவரும் பிறப்புந் துஞ்சின

     ருற்றவ ரிலையென வுன்னி யுண்மையை

     முற்றுறக் கருத்தினின் முடித்துக் காபிர்கள்

     சொற்றவைக் கேற்பவை சொல்லி னேனென்றார்.

139

      (இ-ள்) அவ்விதம் கேட்கவே அம்மா றென்பவர் என்னையீன்ற மாதா பிதாவாகிய இரண்டு பேர்களும் எனது சகோதரியும் பகைவர்களின் துன்பத்தினால் மரித்துப் போயினார்கள். ஆதலினால் யான் இனி நமக்கு உறவானவர் ஒருவரு மில்லரென்று மனசின்கண் நினைத்துச் சத்தியத்தை முற்றும் வண்ணம் சிந்தையில் முடிவுசெய்து நானும் அந்தக் காபிர்கள் சொல்லியவைகளுக்கு ஏற்கப்பட்டவைகளை சொல்லினேனென்று சொன்னார்.

 

1479. ஆக்கமற் றவரிட ரடுக்கி லின்னமும்

     வாக்கினி லொருமொழி வழங்கி யுண்மையைப்

     போக்கறச் சிந்தையுட் பொருத்தித் தீவினை

     நீக்குதல் கடனென நிகழ்த்தி னாரரோ.

140

      (இ-ள்) அம்மாறென்பவர் அவ்வாறு சொல்லிய சமாச்சாரங்களைக் கேள்வியுற்ற நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் ஆதாயமற்றவர்களான அந்தக் காபிர்களினது துன்பமானது உங்களை நெருங்கினால் இனிமேலும் நீங்கள் சத்தியத்தை விடாது மனசின்கண் பொருந்தச் செய்து வாக்கினால் அவர்களுக் கிசைந்த ஒப்பற்ற வார்த்தைகளைப் பேசி அவர்களின் தீய செயலை நீக்குதல் கடமையென்றுத் தங்களினினத்தவர்களுக்குக் கட்டளை செய்தார்கள்.

 

1480. இவ்வண்ண நிகழ்ந்திவ ணிருக்கு நாளையி

     னொவ்விய மனத்திபு னுகல பென்பவன்

     வெவ்விய னடிமைபி லாலை நோக்கிமா

     செவ்விய னிவனென நகைத்துச் சீறினான்.

141