பக்கம் எண் :

சீறாப்புராணம்

566


முதற்பாகம்
 

      (இ-ள்) அவ்வண்ணம் கசப்பான வார்த்தைகளைக் கோபித்துப் பேசின சத்துராதியாகிய அவ்வபூஜகிலின் முகத்தை மேகங்களினாற் செறிந்த குடையையுடைய வள்ளலான நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் பார்த்து அவனது வார்த்தைகளுக்கு மறுத்து யாதொன்றும் பேசாமல் பந்துக்களற்ற தனித்தவரைப் போல இளைப்பைக் கொண்ட மனத்தை யுடையவர்களாகி வயலின்கண் உண்டாகுந் தாமரைப் புஷ்பங்களும் இசையாத அவர்களின் சிவந்த முகமானது வெண்மையாயிற் றென்று சொன்னாள்.

 

1494. பழுதுறுங் கொடிய மாற்ற மபூசகல் பகர்ந்த தெல்லாம்

     பொழிகதிர்ப் பொருப்புத் திண்டோட் புரவலர் பொறுத்தாரென்ன

     வழுவறு அம்சா கேட்டு மனத்தினுள் வேக மீறிக்

     குழுவொடுந் திரண்டு வைகுங் கொடியவ னிடத்திற் சார்ந்தார்.

155

      (இ-ள்) அபூஜகி லென்பவன் அவ்விதம் பேசிய குற்றமுற்ற கொடிய வார்த்தைக ளெல்லாவற்றையும் கிரணங்களைப் பொழியா நிற்கும் மகாமேரு பருவதத்தைப் போன்ற திண்ணிய புயங்களையுடைய அரசரான நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் சகித்தார்களென்று அவர்களின் சிறிய தந்தையர்களி லொருவரான அந்த ஹம்சா அவர்கள் தங்களின் காதுகளினாற் கேள்வியுற்று மனசினகம் கோபமானது அதிகரித்துத் தங்களின் கூட்டத்தோடும் கூடி அங்கு தங்கிய கொடுமையை யுடையவனான அந்த அபூஜகிலிடத்திற் போனார்கள்.

 

1495. படிறபூ சகுலென் றோதும் பாதகன் வதன நோக்கி

     யடல்முகம் மதுவைச் சொல்லா தவமொழி பகர்ந்த தெந்த

     மிடலெனச் சினந்து சீறி வீரவேற் றடக்கை வில்லா

     லுடைபடச் சிரத்திற் றாக்கி யுறுக்கொடுங் கறுத்துச் சொல்வார்.

156

      (இ-ள்) அவ்விதம் போன ஹம்சா அவர்கள் வஞ்சகமமைந்த அபூஜகிலென்று சொல்லும் துரோகத்தையுடையவனின் முகத்தைப் பார்த்து வலிமையையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைப் பேசாத வீணான வார்த்தைகளினாற் பேசினது எந்த வலிமையினாலென்று கோபித்துச் சீற்றமுற்று வீரத்தையுடையதைக் கொண்ட பெரிய கையினது வில்லினால் உடைபடும் வண்ணம் அவனின் தலையில் அடித்து அதட்டுதலுடன் கோபித்துச் சொல்லுவார்கள்.