பக்கம் எண் :

சீறாப்புராணம்

565


முதற்பாகம்
 

      (இ-ள்) ஹம்சா அவர்கள் அவ்விதம் மெல்லிய இலைகளையுடைய காட்டின்கண் சென்று தங்களின் வேலாயுதத்தினால் அங்குற்ற பல ஜனங்களும் கூட்டமுற்று ஒலிக்கும்படி மிருகக் கூட்டங்களைத் தாக்கி அன்புடன் வேட்டையாடி மனமானது பூரித்து ஓங்கும் வண்ணம் விரைவில் அந்தக் காட்டைக் கடந்து மேகங்கள் தங்காநின்ற கோட்டை மதிளின் காவலையுடைய தெய்வீகம் பொருந்திய மக்கமா நகரத்தில் வந்து சேருகின்ற சமயத்தில்.

 

1491. செல்லுறழ் கரச்சுத் ஆனென் றோதிய செவ்வித் தோன்ற

     லில்லுறைத் தொழும்பி லுள்ளா ளிளங்கொடி யொருத்தி வெற்றி

     வில்லணி தடக்கை யேந்தி வரும்விற லம்சா வென்னும்

     வல்லிய மெதிரிற் புக்கி வாய்திறந் துரைக்க லுற்றாள்.

152

      (இ-ள்) மேகத்தைப் போன்ற கைகளை யுடைய ஜூத்ஆனென்று சொல்லிய அழகிய அரசரானவரின் வீட்டின்கண் தங்கா நிற்கும் அடிமைகளி லுள்ளவளான இளம் பருவத்தைக் கொண்ட கொடி போலும் ஒரு பெண்ணானவள் அழகிய பெரிய கையின்கண் விஜயத்தைப் பெற்ற கோதண்டத்தைத் தாங்கி வரா நிற்கும் வீரத்தையுடைய ஹம்சா வென்று சொல்லும் புலியானவர்களின் முன்னர்ப் போய்த் தனது வாயைத் திறந்து சொல்ல ஆரம்பித்தாள்.

 

1492. ஒன்னலர்ச் செகுக்கும் வேலோ யுனதுயிர்த் துணைவ னீன்ற

     மன்னர்மன் னவரைச் செல்வ முகம்மதை வதன நோக்கி

     யின்னலுற் றகமுங் கொள்ளா விழுக்கொடும் வழுக்கொண் மாற்ற

     முன்னியுற் றுரைக்க வொண்ணா தபூசகு லுரைத்த தன்றே.

153

      (இ-ள்) சத்துராதிகளைக் கொல்லா நிற்கும் வேலாயுதத்தையுடைய வர்களே! உங்களது உயிர் போலும் சகோதரர் பெற்ற இராஜாதி இராஜரானவர்களைச் செல்வத்தையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமானவர்களை, அவர்களின் முகத்தைப் பார்த்து வருத்தமடைந்து மனமுங்கொள்ளாத நிந்தனையோடும் குற்றத்தைக் கொண்ட வார்த்தைகள் அபூஜகி லென்பவன் சொன்னவற்றை மனசின்கண் நினைத்துப் பொருந்திச் சொல்ல முடியாது.

 

1493. கைப்புரை சினக்கக் கூறுங் கருதலன் முகத்தை நோக்கி

    மைப்படுங் கவிகை வள்ளன் மறுத்தொன்று மொழிகி லாம

    லெய்ப்புறு மனத்த ராகி யினமில்லாத் தமியர் போலச்

    செய்ப்படும் வனச மொவ்வாச் செம்முகம் வெளிறிற் றென்றாள்.

154