பக்கம் எண் :

சீறாப்புராணம்

571


முதற்பாகம்
 

      (இ-ள்) அவ்விதம் ஓதிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் சத்துராதிக ளென்னும் யானைகளுக்கு வலிமையையுடைய சிங்கமாகிய உமரென்பவரைக் கொண்டு அல்லது அபூஜகிலைக் கொண்டு எனக்கு இவ்வுலகத்தின்கண் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்க நிலைமையை வலிமையுறும் வண்ணம் அருள் செய்வாய் இதைத் தவிர வேறே யாதொன்று மில்லையென்று நன்மையுடன் துஆச் செய்தார்கள்.

 

1506. இந்த மன்னர்க ளிருவரி லொருவரென் வசமாய்த்

     தந்து தீனிலை நிறுத்துவை யெனத்தனி முதலைப்

     புந்தி கூர்தர வுரைத்தனர் கேட்டனர் புகழ்ந்தார்

     சிந்து வெங்கதி ரெழுந்தது விழுந்தது திமிரம்.

4

      (இ-ள்) அன்றியும், இந்த அரசர்களாகிய இருவர்களில் ஒருவரை எனது பக்கத்தில் அருளி, தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தை நிலையாக நிற்கச் செய்குவாயென்று சொல்லி ஒப்பற்ற முதலான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவைப் புத்தியானது அதிகரிக்கும் வண்ணம் வினாவித் துதித்தார்கள். அப்போது சூரியன் கீழ்பாற் கடலில் உதயமாயினான். அந்தகார மானது வீழ்ந்தது.

 

1507. அற்றை யிற்பகற் போதினி லபூசகு லவையுள்

     வெற்றி வேந்தர்கள் பலருட னுமறையும் விளித்துக்

     கற்ற வாள்வலி யவர்க்குறு கருமமென் மனத்தி

     லுற்ற தொன்றுள தியாவருங் கேண்மினென் றுரைத்தான்.

5

      (இ-ள்) அன்றையதினம் பகற் சமயத்தில் அபூஜகிலென்பவன் தனது சபையினகம் விஜயத்தை யுடைய அரசர்களனேகருடன் உமரென்பவரையும் பார்த்து வாள் வல்லமையிற் பழகியவர்களுக்கு ஒரு காரியம் எனது மனசின்கண் பொருந்தினதுண்டு. அதை நீங்கள் யாவர்களும் கேளுங்களென்று சொன்னான்.

 

1508. திக்கு நான்கினுந் திசையினுந் தேயங்க டனினு

     மக்க மேயிக லறுந்தலம் வலுமையு மஃதே

     மிக்க வீரத்தி னம்மினத் தவரதின் மேலோ

     ரொக்கு மியாந்தொடுத் ததின்முடி யாததொன் றிலையே.

6

      (இ-ள்) நான்கு திக்குகளிலும் எண்டிசைகளிலும் அவற்றின் கண்ணுள்ள ஊர்களிலும் மக்கமாநகரமே விரோதமற்ற தலம். அன்றியும், வலிமையை யுடையதும் அந்நகரமே. மிகுந்த வீரத்தினாற் பொருந்தா நிற்கும் நமது கூட்டத்தார்கள் அதிலும் மேலானவர்கள் ஆதலால் நாம் தொடங்கிய கருமங்களில் முடியாதது யாதொன்றுமில்லை.