பக்கம் எண் :

சீறாப்புராணம்

640


முதற்பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு போய்ச் சேர்ந்த அவன் கன்னமதம், கைமதம், கோசமத மென்னும் மூன்று மதங்களையுமுடைய யானையை நிகர்த்த அதிகாரியாகிய இந்நூலின் தியாக நாயகர் அபூல்காசீம் மரைக்காயரவர்கள் யாசகர்களுக்குக் கொடுத்து அதனால் அவர்களின் செல்வமானது அதிகரித்ததைப் போல அதிகரித்திருக்கும் பரிமளமமைந்த புஷ்பங்களை யுடைய பெரிய தடாகங்களையும் வயல்களையும் வழிகின்ற மதுவினது வாசனையுடன் பழங்களைத் தராநிற்கும் சோலைகளெல்லாவற்றையும் தாண்டினான்.

 

1701.குன்றுங் கானமு மடவியு நதிகளுங் குறுகிக்

    கன்று மென்மயிர்க் கவரியுந் திரிவனங் கடந்து

    வென்றி வெய்யவன் கதிரினு மனத்தினும் விரைவா

    யென்றும் பூமகள் பொருந்திய திமஸ்கினை யெதிர்ந்தான்.

43

      (இ-ள்) அன்றியும், அவன் மலைகளையும் காடுகளையும் சோலைகளையும் ஆறுகளையும் நெருங்கி மெல்லிய உரோமங்களை யுடைய கவரிமான்களும் அவற்றின் குட்டிகளும் திரிகின்ற வனங்களையும் தாண்டி விஜயத்தையுடைய சூரிய கிரணத்திலும் மனத்திலும் அதிகவேகமாக இலக்குமி யானவள் எந்தக் காலமும் நீங்காது தங்கியிருக்கும் திமஸ்கென்று சொல்லும் பட்டணத்தைப் போய்ச் சந்தித்தான்.

 

1702.மின்னெ னக்கதிர் தருமணி குயிற்றிவெண் சுதையாற்

    றென்னு லாவிய மேனிலை மாடமுஞ் செறிந்த

    பொன்னி னன்கதிர் குலவிய கொடிகளும் பொருவாக்

    கன்னி மாமதிட் புரிசையுந் திமஸ்கையுங் கண்டான்.

44

      (இ-ள்) அவ்விதம் சந்தித்த அவன் மின்னைப் போலப் பிரகாசத்தைத் தரா நிற்கும் இரத்தின வர்க்கங்களைப் பதித்து வெண்ணிறத்தைக் கொண்ட சுண்ணச் சாந்தினால் அழகானது உலாவப் பெற்ற மேனிலைகளை யுடைய மாடங்களையும் செந்நிறத்தைக் கொண்ட பொன்னினது பிரபையை நிகர்த்த நல்ல ஒளியானது ஒளிரப் பெற்ற கொடிகளையும் யாவும் ஒப்பாகாத அழிவின்மையை யுடைய கோட்டை மதில்களையும் திமஸ்கு நகரத்தையும் தனது கண்களினாற் பார்த்தான்.

 

1703.திரையெ டுத்தெறிந் திரைதரு கடலினுஞ் செழித்து

    விரைக மழ்ந்தமென் குவளையும் வனசமு மேவிக்

    கரைத தும்பிய சீகரத் தகழினைக் கடந்து

    புரிசை வாயிலுங் கடந்தரும் பெரும்பதி புகுந்தான்.

45