பக்கம் எண் :

சீறாப்புராணம்

650


கடற

முதற்பாகம்
 

1731.கடற்படு நிலத்தி லில்லாக் காரணங் களைகபீபு

    தொடுத்துரைத் திடுவன் கேட்டு மகிழ்ச்சியிற் றுவாச்செய் வீரா

    லடுத்திருந் தவர்க்குந் தூரத் தவர்க்குங்கண் டறிய வல்லே

    படைப்புள தெவைக்குந் தோன்றப் பலித்திடுங் கடிதின் மாதோ.

73

      (இ-ள்) அன்றியும், அந்த ஹபீபரசன் சமுத்திரமானது தோயப் பெற்ற இந்தப் பூலோகத்தின்கண் இல்லாத காரணங்களைக் கோத்துத் தங்களிடத்தில் சொல்லுவான். நீங்கள் அவைகளைக் காதுகளினால் கேள்வியுற்றுச் சந்தோஷத்தோடும் துஆச் செய்வீர்களேயானால் அவ்வண்ணமே தங்களைச் சமீபத்திலிருப்பவர்களும் தூரத்திலுள்ளவர்களும் சீக்கிரமாய்ப் பார்த்து உணரும் வண்ணம் படைப்பாக வுள்ளதான யாவற்றிற்கும் தெரியும்படி விரைவில் வாய்த்திடும்.

 

1732.உடற்றசை திரண்ட தல்லா லுறுப்பொன்று மிலதாய்ப் பின்னோர்

    மடக்கொடி தனைக்கொ ணர்ந்தான் வடிவுசெய் திடுமி னென்னத்

    துடக்குறக் கேட்பன் கேட்கு முரைப்படி துவாச்செய் வீராற்

    கடற்படு புவிக்குட் காணாக் காரணந் தோன்று மாதோ.

74

      (இ-ள்) பின்னர் உடலினது மாமிசங்கள் திரட்சியுற்றதே யல்லாமல் ஒருறுப்பேனு மில்லாததாக ஒப்பற்ற இளம்பருவத்தையுடைய கொடி போலும் ஒரு பெண்ணைக் கொண்டு வருகிறான் அதைத் துடக்குறும்படி மானிடவடிவஞ் செய்திடுங்க ளென்று கேட்பான். அவன் கேட்கும் வார்த்தையின் வண்ணமே நீங்கள் துஆச் செய்வீர்களேயானால் அதனால் சமுத்திரமானது தோயப் பெற்ற இப்பூமியினகம் ஒருக்காலத்திலும் காணாத காரணமுண்டாகும்.

 

1733.வாட்படைத் திமஸ்கு வேந்தன் மறையுணர் தெளிவா லெண்ணிக்

    கேட்பதெவ் வழிக்கு நுந்தங் கிளரொளித் திருவாய் விண்டு

    கோட்பட வுரையு மென்னச் சபுறயீல் கூறி னார்தேந்

    தோட்படு மரவ மாலை துலங்கிய குரிசிற் கன்றே.

75

      (இ-ள்) அன்றியும், வாளாயுதத்தையுடைய திமஸ்கு நகரத்தினது அதிபனான ஹபீபென்பவன் வேதங்களை அறிந்த தெளிவினால் தனது மனசின்கண் ஆலோசித்துக் கேட்பதாய் எந்நெறிக்கும் உங்களுடைய உயர்ந்த பிரகாசத்தை யுடைய தெய்வீக வாயைத் திறந்து குணமாகவதில் சொல்லுங்க ளென்று மதுவைக் கொண்ட குங்கும்ப் புஷ்பத்தினாலான மாலைகள் தோயப்பெற்ற தோள்களானவை பிரகாசிக்கும் குரிசிலாகிய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கு ஜபுறயீல் அலைகிஸ்ஸலா மவர்கள் சொன்னார்கள்.