பக்கம் எண் :

சீறாப்புராணம்

656


முதற்பாகம்
 

சந்தோஷமதிகரித்து வேற்றுமையில்லாத மனத்தை யுடையவர்களாக விருப்பமுற்று எழும்பினார்கள்.

 

1749.குரகதத் திரளி னோடுங் கொலைமதக் கரியி னோடும்

    விரிகதி ரெஃகங் கூர்வாள் வில்லுடைத் தலைவ ரோடு

    மருமலர்ச் சோலை சூழு மக்கமா நகரஞ் சேர்ந்து

    புரவலர்க் கரியே றன்னான் புதியமண் டபத்திற் புக்கான்.

91

      (இ-ள்) அவ்வாறு எழும்பவே அரசர்களாகிய யானைகளுக்கு ஆண் சிங்கத்தை நிகர்த்தவனான ஹபீபரசன் குதிரைக் கூட்டங்களோடும் கொலைத் தொழிலையுடைய மதத்தைக் கொண்ட யானைகளோடும் விரிந்த பிரகாசத்தைப் பெற்ற வேலாயுதத்தையும் அழகிய கூர்மை தங்கிய வாளாயுதத்தையும் கோதண்டத்தையுமுடைய தலைவர்களோடும் வாசனையமைந்த புஷ்பங்களையுடைய காவுகள் வளைந்த திருமக்கமா நகரத்தை யடைந்து தனக்கென்று ஏற்படுத்தியிருக்கும் நூதனமாகிய மாளிகையின்கண் நுழைந்தான்.

 

1750.செய்யவா யொளிவெண் மூரற் சிறுநுதற் பெரிய கண்ணார்

    கையின்வெண் ணிலவின் காந்திக் கவரிகா லசைப்ப நீண்ட

    வையக முழுதுங் காக்கு மணிக்குடை நிழற்ற வெற்றி

    வெய்யவ னிருந்த தென்ன விருந்தனன் திமஸ்கு வேந்தன்.

92

      (இ-ள்) அவ்விதம் நுழைந்த திமஸ்கு நகரத்தினது அரசனான ஹபீபென்பவன் சிவந்த வாயையும் பிரகாசத்தைக் கொண்ட வெள்ளிய பற்களையும் சிறிய நெற்றியையும் பெரிய கண்களையுமுடையவர்களாகியபெண்கள் தங்களின் கைகளிற் கொண்ட வெள்ளிய நிலவினது பிரபையையுடைய சாமரத்தினால் காற்றை அசைக்கவும், நெடிய இந்தப் பூலோகமனைத்தையும் காப்பாற்றும் இரத்தினங்களையுடைய கொற்றக்குடையானது நிழலைச் செய்யவும், விஜயத்தைப் பெற்ற சூரியனானவன் இருந்ததைப் போலும் ஆசனத்தின்கண் தங்கியிருந்தான்.