பக்கம் எண் :

சீறாப்புராணம்

730


முதற்பாகம்
 

போர்வையென்று சொல்லும் கருநிறந் தங்கிய வலிமையான அந்தகாரத்தினிடத்து உதயமாகா நிற்கும் சந்திரனைப் போலும், விரிந்த சமுத்திரத்தினது பெரிய ஜலத்தை யருந்திச் சூலினாலுளையப் பெற்ற மேகத்தின்கண் தோற்றமாகும் மின்னலினது கூட்டத்தைப் போலும், வண்டினங்கள் மதுவை யருந்திப் பாடுகின்ற குங்கும மாலையணிந்த தோள்களையுடைய நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் “லாயிலாஹ இல்லல்லாகு முஹம்மதுர்ற சூலுல்லாஹி” யென்னும் கலிமாவை யாவர்களுக்கும் தெரியும்படி பவளம் போன்ற தமது வாயி னிதழ்களைத் திறந்து ஓதிக் கொண்டு நெருங்கிய அந்தச் சபையின்கண் எழுந்து நின்றாள்.

 

1955. விண்ணகத் தரம்பைக் குலத்தினும் வடிவாய்

          விரிகடன் மகளினும் வியப்பாய்

     மண்ணகத் துறையு மெழுவகைப் பருவ

          மடந்தைய ரணிந்திடு மணியாய்க்

     கண்ணினுக் கடங்கா தழகினைச் சுமந்த

          கனியுரு வெடுத்தகாட் சியதாய்ப்

     பெண்ணலங் கனிந்து நலனெழில் பிறங்கப்

          பெருநிலத் தெழுந்துநின் றனளே.

17

      (இ-ள்) அன்றியும், வானலோகத்தின் கண்ணுள்ள தேவ மகளிர்களினது கூட்டத்தைப் பார்க்கிலும் வடிவாகவும், விரிந்த கடன் மகளைப் பார்க்கிலும் வியப்பாகவும், இப்பூமியின்கண் தங்கும், பேதை, பெதும்பை,. மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ணென்னும் எழு வகைப் பருவங்களையுடைய மாதர்கள் தரித்திடும் ஆபரணமாகவும், கண்களுக்கமையாத அழகைத் தாங்கிய கனிந்த சொரூபத்தையெடுத்த தோற்றமாகவும், பெண்ணலமானது கனியப் பெற்று நல்ல அழகானது பிரகாசிக்கும் வண்ணம் இந்தப் பெரிய பூமியினிடத்து எழும்பி நின்றாள்.

 

1956. மங்குலிற் பெருகி விடத்தினுங் கருகி

          வரியற லினுமினு மினுத்துத்

     தங்கிய யிதழித் திரளினுந் திரண்டு

          சைவலத் தொடரினுந் தழைத்துக்

     கொங்குறக் குழன்று நெறித்துவார்ந் தொழுகிக்

          குவலயத் திளைஞர்கண் வழுக்க

     வெங்கணன் னயினார் முன்னைநா ளழைத்த

          விருளினு மிருண்டமைக் குழலாள்.

18