பக்கம் எண் :

சீறாப்புராணம்

753


முதற்பாகம்
 

ஈமான் கொண்டவர்கள்

ஹபஷா ராச்சியத்துக்குப் போந்த படலம்.

 

கலிநிலைத்துறை

 

2015. மாசி லானருள் பெருகிய மக்கமா நகரி

     லாசி லாநபி தீனினை நிறுத்துமந் நாளிற்

     பாச மற்றவ னபூசகல் கிளைபல பகுப்பாய்ப்

     பூச லிட்டனர் பெரும்பழி நடுநிலை புகுந்தே.

1

      (இ-ள்) களங்க மில்லாத நமது நாயகம் நபி காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் குற்றமற்றவனாகிய ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவின் திருக்காருண்ணியம் ஓங்கப் பெற்ற மக்கமா நகரத்தின்கண் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்க நிலைமையை நிலையாக நிறுத்துகின்ற அந்நாளில், அன்பற்றவனான அபூஜகி லென்பவனது பந்து ஜனங்கள் பலபிரிவாய் மத்தியில் நுழைந்து பெரிய பழியைக் கொண்ட கலகத்தைச் செய்யலானார்கள்.

 

2016. சிகையி னீண்முடி குயிற்றிவெண் சுதைநடுத் தீற்றி

     நகைநி லாத்தரு மேனிலை மக்கமா நகரின்

     மிகைம னத்தொடு காபிர்க டினந்தொறும் விளைக்கும்

     பகையி னோடரும் பஞ்சமு முடன்பரந் ததுவே.

2

      (இ-ள்) அன்றியும், உச்சியில் நெடிய மகுடத்தைப் பதித்து நடுவில் வெள்ளிய சுண்ணச் சாந்து தீற்றி ஒள்ளிய பிரகாசத்தைத் தரா நிற்கும் மாளிகைகளை யுடைய மக்கமா நகரத்தின்கண் காபிர்கள் பிரதிதினமும் மிகைக்கப் பெற்ற சிந்தையுடன் செய்யும் பகைமையோடு கூட அரிதாகிய பஞ்சமும் பரவிற்று.

 

2017. வெறுத்த காலமுங் காபிர்க டொடுத்தவல் வினையு

     மறுத்தி லாமையும் பீஸபீ லாற்களை மாய்த்து

     நிறுத்துந் தீனென வேவலு மில்லையா னிதமும்

     பொறுத்தி ருப்பதெவ் வழியென வகத்திடை பொறுத்த.

3

      (இ-ள்) அன்றியும், அந்நபிகட் பெருமானவர்களுக்கு வெறுக்கப் பெற்ற காலமாகிய பஞ்ச காலமும், காபிர்கள் ஆரம்பித்த கொடுமை தங்கிய வினைகளும், மறுத்து நடக்கும் வேறு மார்க்கங்கள் இல்லாமையும் பீஸபீ லென்னும் யுத்தத்தினால் களைகளாகிய அக்காபிர்களைக் கொன்று தீனுல் இஸ்லா மென்னும் மார்க்கத்தை நிறுத்துமென்று ஏவலும்; இல்லாததினால்